கோவையில் நள்ளிரவில் மாயமான குழந்தை சடலமாக மீட்பு..

0 2869

கோவை விளாங்குறிச்சியில் தாயுடன் இரவு உறங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை, வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விளாங்குறிச்சியில் ஜேசிபி இயந்திரம் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருபவர் கனகராஜ். அவரது மனைவி காஞ்சனா மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தை அரும்பதா இருவரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதே பகுதியிலுள்ள காஞ்சனாவின் தாய் வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டில் காஞ்சனாவின் தாய் பேச்சியம்மாள், காஞ்சனாவின் பெரியப்பா குப்புசாமி , குப்புசாமியின் மகன் ரகுநாத், சித்தி மகன் பூபதி , உறவினர் கற்பகம் ஆகியோர் இருந்துள்ளனர்.

இரவு தாய் காஞ்சனா அருகில் குழந்தை அரும்பதா உறங்கிக் கொண்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில் குழந்தையைப் பார்த்ததாகக் கூறும் காஞ்சனா 4.30 மணியளவில் பால்காரர் வந்து எழுப்பியபோது, பக்கத்தில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை என்று கூறுகிறார். வீட்டில் இருந்த அனைவரும் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்காததால், போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் வந்து பார்த்தபோது, வீட்டின் எதிரே கருவேலங்காட்டிலுள்ள பாழுங்கிணறு ஒன்றில் குழந்தை அரும்பதா வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். கிணற்றின் அருகிலேயே மது பாட்டில், பெட்ஷீட், துணிக்கடையின் கட்டை பை, சாப்பிட்டு விட்டு போட்ட பிளாஸ்டிக் பை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். குழந்தையின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

வீட்டில் நாய் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், அதிகாலை நேரத்தில் வெளியாட்கள் யாரேனும் வீட்டுக்குள் நுழைந்திருந்தால் நாய் குரைத்து சப்தம் எழுப்பியிருக்கும். அவ்வாறு நாய் குரைக்காததால், அதே வீட்டைச் சேர்ந்த ஒரு நபரே குழந்தையின் இறப்புக்குக் காரணமாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

காஞ்சனாவின் தாய் பேச்சியம்மாளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரது மூத்த சகோதரரின் மகனான ரகுநாத் மற்றும் இளைய சகோதரர் மகன் பூபதி ஆகியோர் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments