தண்ணீர் வருமா? குடங்களுடன் காத்திருப்பு...

0 360

சென்னை அடுத்த பம்மலில் குடிநீருக்காக திண்டாடி வரும் பொதுமக்கள், அதிகாலை மூன்று மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து, குடங்களில் தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.

சென்னை புறநகர் பகுதிகளான பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதனால் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டாலும், கிடைக்க பெறும் குடிநீர் போதுமானதாக இல்லை என்றும், அனைத்து தெருக்களுக்கும் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்பதே அப்பகுதியினரின் புகாராக உள்ளது.

தெருக்களில் ஆங்காங்கே உள்ள குடிநீர் டேங்கர் மூலம் வழங்கப்படும் குடிநீரையே அப்பகுதியினர் நம்மியுள்ளனர். குடிநீரை பெறுவதற்கு அதிகாலை மூன்று மணிக்கே வந்து குடங்களை வரிசைப்படுத்து பொதுமக்கள், நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்தி குடிநீரை பிடித்து செல்கின்றனர்.

குடிநீர் குடங்களை தலை சுமையாகவும் வாகனங்களில் வைத்தும் எடுத்து செல்கின்றனர். குடிநீரை பிடிப்பதற்கு பல மணி நேரம் ஆவதால் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

தனியார் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீர், குடம் பத்து முதல் இருபது ரூபாய் வரை இருப்பதால், அதனை வாங்க முடியாத நிலையில் பொதுமக்கள் உள்ளனர். எனவே தற்போதிலிருந்தே குடிநீர் சேமிப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு, வருங்காலத்திலாவது குடிநீர் பஞ்சத்தை போக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் நியாயமான கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments