நாளை நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் மும்முரம்

0 305

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி அதற்கானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளதாக வந்த புகாரால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தரப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், தேர்தலை வழக்கம் போல் நடத்த உத்தரவிட்ட நீதிமன்றம், வாக்குகளை எண்ணக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி நடிகர் சங்க தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடைபெறும் இடம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் 6 வாக்குப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே நடிகர் சங்கத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதரக் கோரி, பாண்டவர் அணியின் தலைவர் நாசர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து, வேண்டுகோள் விடுத்தார். சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சரை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரிடத்தில் தங்கள் அணிக்கு ஆதரவு கேட்டதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே நடிகர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் பாக்கியராஜ், தேர்தல் ஒரு சார்பு முறையில் நடப்பதாகவே தாங்கள் எண்ணுவதாகக் கூறினார்.

சங்கரதாஸ் அணி சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் உதயா மற்றும் நடிகர் ஆரி ஆகியோர், நடிகர் சங்க அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மநாபனை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் உதயா, நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்னும் பல இடங்களுக்கு தபால் வாக்குகள் சென்றடையவில்லை எனக் கூறினார்.

நடிகர் சங்கத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை பெறுவதற்கு, இன்று இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் சங்க அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தபால் வாக்குகளை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என இரு அணியினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால்  கால அவகாசம் முடிந்துவிட்டதால் இனி வரும் தபால் வாக்குகள் ஏற்கப்படாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments