தண்ணீர் தட்டுப்பாடு..! எதிர்காலத்தில் சென்னை தப்புமா?

0 894

2020 ஆம் ஆண்டு முதல் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றத் தொடங்கிவிடும் என்றும், 2030 ஆண்டில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனவும் நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி

சென்னை , டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களின் நிலத்தடி நீர் வளம் குறித்த ஆய்வறிக்கையை அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போகக் கூடிய சூழல் 21 நகரங்களிலும் உருவாகியுள்ளதாகக் கூறியுள்ளது.

இதனால், 10 கோடிப் பேர் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும், 2030 ல் ஏறக்குறைய இந்தியாவின் 40 சதவீதம் மக்களுக்கு குடிநீரே இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம் என்றும் நிதி ஆயோக் எச்சரித்துள்ளது.

சென்னையில் பாயும், கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆகிய 3 நதிகள், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழாவரம் ஆகிய 4 நீர் ஆதாரங்கள், சதுப்பு நில வனப்பகுதிகள் முற்றிலும் வறண்டு போகும் என்ற அபாய அறிவிப்பையும் நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் மட்டும் கைகொடுக்காது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தேசிய நீர்வள கழக முன்னாள் இயக்குனர் மனோகரன் குஷலானி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள் பேட்டியில், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு அதிக செலவாகும் என்றும், அதற்கும் ஒரு எல்லை உள்ளது என்பதால், மழை நீர் சேகரிப்பே சிறந்த வழி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அரசு மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பொறுப்பெடுத்து செயல்படுத்தினால், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வறட்சி என்று கூறப்படும் இந்த ஆண்டிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் 800 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. சென்னையில் சரசாரியாக ஆண்டுக்கு 12 டி.எம்.சி. நீர்த் தேவை உள்ள நிலையில் 17 டி.எம்.சி. மழை பொழிகிறது.

இந்த மழை நீரில் 70 சதவீதத்திற்கும் மேல் பெய்தவுடன் சாக்கடையில் கலந்து, கடலுக்கு சென்று சேர்ந்து விடுகிறது என்கின்றனர். 

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்கள். சென்னையில் பெய்யும் மழையில் 5 சதவீத அளவிற்குக் கூட தண்ணீர் நிலத்தடிக்கு செல்வதில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

மேலும், சென்னையிலுள்ள நீர் நிலைகளைப் பராமரிக்க 1985 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், உலக வங்கி உள்ளிட்டவற்றிலிருந்து கடன் வாங்கி செலவளித்துள்ளது. இருந்தும் ஆக்கிரமிப்புகள், முறையான பராமரிப்பின்மை காரணமாக அவற்றிலும் நீர் தேங்குவது குறைந்து வருகிறது.

எனவே, நீர் நிலைகளிலும், நீர் வழித் தடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி முறையாக பராமரிக்க வேண்டியது அவசரக் கடமையாக உள்ளது.

மேலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் முன் எப்போதும் இல்லாத தீவிர நடவடிக்கை தேவை என்பதையே தற்போதைய தண்ணீர் பஞ்சமும், நிதி ஆயோக்கின் எச்சரிக்கையும் உணர்த்துகின்றன....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments