செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்..! காவல் ஆய்வாளர் மீது புகார்

0 2281

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் ஆய்வாளருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து செய்தி வெளியிட்ட, பாலிமர் நியூஸ் செய்தியாளர் மீது கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பாலிமர் நியூஸ் செய்தியாளராக பணிபுரிந்துவருபவர் முத்துவேல். தட்டார்மடத்தில் உள்ள தனது அலுவலகத்தில் அமர்ந்து கணினியில் செய்தி பதிவு செய்து கொண்டிருந்த போது, அரிவாளுடன் புகுந்த ரவுடி சண்முகநாதன் உள்ளிட்ட 4 பேர் கூலிப்படை கும்பல் அவரை சுற்றிவளைத்துள்ளது.

"இன்ஸ்பெக்டர் கஜேந்திரனுக்கு எதிராக செய்தி போடுவியாலே..." என்று கேட்டபடி சண்முகநாதன் என்ற ரவுடி, அரிவாளால் முத்துவேலை சரமாரியாக வெட்டியுள்ளான். தலை, வயிறு, மார்பு, கை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த முத்துவேலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

செய்தியாளர் முத்துவேலுக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடுமையான காயங்களுக்கிடையே, தன்னை கொலை செய்ய கூலிப்படையை ஏவியது காவல் ஆய்வாளர் கஜேந்திரன் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் ஆய்வாளராக இருந்த கஜேந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவரின் மனைவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக, அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரை பாலிமர் நியூஸ் செய்தியாளர் முத்துவேல் செய்தியாக வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து கந்துவட்டி வழக்கு ஒன்று தொடர்பாக காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்தது தொடர்பாகவும் செய்தி வெளியிடப்பட்டது. இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் பழிக்கு பழிவாங்க, கடந்த தீபாவளி தினத்தன்று அரசு அனுமதித்த 2 மணி நேர கால அளவை விட கூடுதல் நேரம் பட்டாசு வெடித்ததாக பொய்யான வழக்குப் பதிவு செய்து செய்தியாளர் முத்துவேலை கைது செய்ய முயன்றார் காவல் ஆய்வாளர் கஜேந்திரன்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால் கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது. மேலும் தட்டார்மடம் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் நடந்த மணல் கடத்தல், பெண்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் குறித்தும் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டதால், தன்மீது காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தீராத வன்மத்துடன் இருந்ததாக சுட்டிக்காட்டி உள்ளார் முத்துவேல்.

அதோடு இல்லாமல் திங்கட்கிழமை ஒரு வழக்கறிஞரை காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தாக்கியது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. அதனையும் செய்திக்காக முத்துவேல் மட்டுமே படம் பிடித்ததால் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கஜேந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கூலிப்படையை ஏவி காவல் ஆய்வாளர் இந்த கொலைவெறித் தாக்குதலை நிகழ்த்தியதாக முத்துவேல் புகாரில் தெரிவித்து உள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளையும், ரவுடிகளை ஏவிய காவல் ஆய்வாளர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறையினரை தாக்கியதாகக் கூறி ரவுடிகளை சுட்டுக்கொல்லும் போலீசார், செய்தியாளரை கூலிப்படை ஏவி வெட்டிய காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்க போகின்றனர் ? என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

இதற்கிடையே, ஸ்ரீவைகுண்டம் பாலிமர் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவிடம், தூத்துக்குடி பத்திரிக்கையாளர்கள் மன்றத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மனுவினை பெற்று கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தாக்குதல் நடத்தியவர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தூத்துக்குடி எஸ்.பி. முரளி ரம்பா தெரிவித்திருக்கிறார். 

ஸ்ரீவைகுண்டம் பகுதி பாலிமர் நியூஸ் செய்தியாளர் மீது கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தியதாக காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது, தட்டார்மடம் காவல்நிலையத்தில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ், காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத வகையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், விரைவில் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments