பித்தளைக் குடத்தில் இரிடியம்.. ஏமாறுவோர் இருக்கும் வரை....

0 2014

பித்தளைக் குடத்தில் மின்னணு தொழில்நுட்பத்தைப் புகுத்தி இரிடியம் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல் கன்னியாகுமரி போலீசிடம் சிக்கியுள்ளது. சினிமா உதவி இயக்குநர் தலைமையில் சதுரங்க வேட்டையாடிய கும்பலின் மோசடியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் போலீசில் சிக்கியுள்ள இந்த கும்பலோ, கருகிப் போன பித்தளைக் குடத்தை இரிடியம் என நம்ப வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிநாதபுரத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் அளித்த புகாரின் பேரில் தான் இந்தக் கும்பல் சிக்கி உள்ளது. சொந்தமாக டேங்கர் லாரி வைத்து தண்ணீர் விநியோகம் செய்து வந்த அரவிந்த், சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார். அப்போது இரிடியம் குறித்து அவரது காதில் விழும் படி இருவர் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கேட்டதும், அரவிந்தின் ஆர்வம் அதிகரித்து, அவர்களிடம் பேச்சு கொடுக்கவே இரிடியத்தை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று ஆன்மீகம் கலந்து பேராசையைத் தூண்டியுள்ளனர்.

இதை நம்பிய அரவிந்த், இரிடியம் தனக்கு வேண்டும் என அவர்களிடம் கூறியுள்ளார். இதை கேட்ட அந்த இருவரும் அரவிந்திடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அஞ்சுகிராமம் அருகே உள்ள ஓட்டலுக்கு இரிடியத்தைக் காட்டுவதாக கூறி அந்த இருவரும் அரவிந்தை அழைத்து சென்றனர். அப்போது ஓட்டல் அறையில் இருந்த ஒரு பித்தளைக் குடத்தைக் காண்பித்துள்ளது மோசடிக் கும்பல். அந்தக் குடத்துக்குள் கையை விட்டு பார்க்குமாறும் அந்தக் கும்பல் சொல்லவே, அரவிந்தும் அதே போல் செய்துள்ளார்.

குடத்துக்குள் ஒரு வித அதிர்வை உணர்ந்த அவர், உண்மையிலேயே தெய்வ சக்தி தான் என்று நினைத்து குடத்தை வாங்க முற்பட்டுள்ளார். அதற்கு அந்தக் கும்பல், இந்தக் குடம் தங்களுக்கு அல்ல என்றும் வேறு குடம் தருவதாகவும் கூறி அனுப்பி வைத்துள்ளது. அதன் பின்னர் காலம் தாழ்த்தி வந்த அந்தக் கும்பல், ஒரு கட்டத்தில் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டது. தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரவிந்த் அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து மோசடிக் கும்பலை தேடி வந்தனர். விசாரணையில், மேலகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்த பிரபு,
குமுளியை சேர்ந்த நாகராஜன் மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த சதீஷ் ஆகியோர் தான் இரிடியம் மோசடிக் கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களைக் கைது செய்தனர். இதில் சதீஷ் என்பவர் சில திரைப்படங்களில் உதவி இயக்குநகராகப் பணியாற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காந்தம், காப்பர், இரும்பு, பேட்டரி, பட்டன் என மின்னணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குடத்தை அதிர வைத்து நூதன முறையில் அந்தக் கும்பல் ஏமாற்றி இருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியானது.

மேலும் இதே கும்பல் வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ள போலீசார் 57 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இரிடியம் மோசடியில் ஈடுபட்டு தொழிலதிபர்களிடம் பறித்த 14 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். சாதாரண தகட்டுக்கு வாழ்க்கையை மாற்றும் சக்தி இருக்குமா என்று சற்று யோசித்து இருந்தாலே இந்த மோசடி நடந்திருக்காது.. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments