ஒரு இன்னோவா காரும் நான்கு திருடர்களும்....!

0 3834

சென்னையில் இன்னோவா காரை, விற்பனை செய்து அதை வாங்குபவர்களிடம் மீண்டும் திருடி பலரிடம் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை மதுரவாயலை சேர்ந்த சினிமா பைனான்சியர் தணிகை. இவர், இணையதளத்தில் ஒரு விளம்பரத்தை பார்த்து இன்னோவா காரை விலைக்கு வாங்கியிருந்தார். கடந்த 7-ந் தேதி ஆறு லட்சம் ரூபாய்க்கு காரை வாங்கிய மூன்றே நாட்களில் கானத்தூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருந்த போது, நிறுத்தி வைத்திருந்த இன்னோவா காரை காணவில்லை என புகார் கொடுத்தார்.

அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த கானத்தூர் போலீசார் சிசிடிவி காட்சிகள், கார் திருடு போன பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் ஆகியவற்றை வைத்து காரை திருடிய கணேஷன் மற்றும் பாரதி என இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து இன்னோவா காரையும் பறிமுதல் செய்தனர்.

 இதனிடையே கார் மீட்கப்பட்ட தகவலறிந்து காவல் நிலையத்திற்கு வந்த சினிமா பைனான்சியர் தணிகை, கைது செய்யப்பட்ட திருடர்கள் தான், முன்பு தன்னிடம் காரை விற்றதாகக் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

கைது செய்யப்பட்ட கணேஷன், பாரதியுடன் சேர்ந்து ரிச்சர்ட் மற்றும் சத்யா ஆகிய 4 பேரும் காரை விற்று, அதை அவர்களே திருடி வேறொருவருக்கு விற்க முயன்றுள்ளனர்.

இதற்கு முன்பு இதே காரை நெய்வேலியில் உள்ள நவநீதகிருஷ்ணன் என்பவருக்கு விற்று, பின்னர் அவரிடம் இருந்து திருடி, வாட்ஸ் அப் மற்றும் இணைய தளங்கள் மூலம் வேலூரில் விற்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருடிய மோசடி கும்பல் சினிமா பைனான்சியரான தணிகையிடம் விற்றுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஒரு காரை வைத்து லட்சக்கணக்கில் ஏமாற்றிய இந்த கும்பலில் இருவர் மட்டுமே தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ரிச்சர்ட் மற்றும் சத்யா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட இந்த கார் தற்போது நரேஷ் என்பவரது பெயரில் உள்ளது.

ஒவ்வொருவரிடமும் காருக்கு சிங்கிள் ஓனர் எனக் கூறி விளம்பரம் மூலம் விற்பனை செய்து அதை அவர்கள் பெயரில் மாற்றுவதற்குள் திருடி இவர்கள் லட்சகணக்கில் மோசடி செய்துள்ளதாக கூறும் காவல் துறையினர் இரண்டாவது பயன்பாட்டுக்காக காரை வாங்குபவர்கள் காரின் உரிமையாளர் யார் என ஆவணங்களை பரிசோதித்து அதன் பிறகே வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

சமூக வலைதளங்களிலும், செயலிகள் மூலம் விற்பனைக்கு வரும் பொருட்கள் விலை குறைவாக இருக்கிறதே என ஆசைப்பட்டு இது போன்ற மோசடி கும்பலிடம் சிக்கி கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments