தடை செய்யப்பட்ட மீன் பண்ணை அழிப்பு..!

0 2014

சேலம் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த, தடை செய்யப்பட்ட மீன் வளர்ப்பு பண்ணைகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தால் இடித்து அழித்தனர். உயிருக்கு ஆபத்தை உருவாக்கும் விபரீத மீன் பண்ணை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பார்ப்பதற்கு நம்ம ஊர் கெழுத்தி மீன்கள் போன்றே காட்சி அளிக்கும் இவை அரசால் வளர்ப்பதற்கும் விற்பதற்கும் தடைவிதிக்கப்பட்ட கிளாரியஸ் கரிபீனஸ் (Clarias gariepinus), தாய் கேட்பிஷ் (Thai Catfish), ஆப்ரிக்கன் கேட்பிஷ் (African Catfish) போன்ற மீன்வகைகள் ..!

கோழிக் கழிவுகள், அழுகிய நாய் போன்றவைதான் இவற்றின் உணவு. குறுகிய நாட்களில் பெரிய எடை கொண்டதாக வளரக்கூடிய இந்தவகை மீன்கள், நீர் நிலைகளுக்குச் சென்றால் அங்குள்ள அனைத்து வகையான மீன்களை உண்ணும் கொடூர குணம் கொண்டவை. இதனால் மீன் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதாலும், இந்த வகை மீன்களை வளர்ப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

இந்த தடையை மீறி சேலம் பூலாவரி பகுதியில் விவசாய நிலத்தில் குட்டை அமைத்து உற்பத்தி செய்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரின் பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அதில் இருந்த தடை செய்யப்பட்ட ஆப்ரிகன் கேட் பிஷ் பண்ணைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்தனர்.

அதேபோல் சிவதாபுரம் பகுதியில் அருள் என்பவர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் குட்டை அமைத்து, தடை செய்யப்பட்ட மீன்களை வளர்த்து வந்ததை கண்டறிந்த அதிகாரிகள் அழித்தனர். அதேசமயம் மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை கண்டறிய தண்ணீர் மாதிரிகளை கேனில் எடுத்து சென்றனர்.

இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட கெளுத்தி மீன் இனங்களை உற்பத்தி செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மீன்வளர்ப்பு குளங்கள் மற்றும் மீன்கள் முற்றிலும் அகற்றப்படும் என்று ஆட்சியர் ரோகிணி எச்சரித்தார். மேலும் மீன்பண்ணைகளில் கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல்கெண்டை, வெள்ளிக் கெண்டை, கண்ணாடிக் கெண்டை மீன்கள் போன்ற இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை வளர்த்து பயனடையலாம் என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த வகை மீன்கள் கேரளா மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதியில் இருந்து ஒரு சில சமூக விரோதிகள் மூலம் இங்கு உள்ள விவசாயிகளை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, இது போன்ற கொடிய மீன்களை கொடுத்து வளர்த்து கொடுக்கும்படி அறிவுரையை வழங்கியதோடு, இதனால் அதிக லாபம் பெறலாம் என ஆசையை தூண்டி விட்டு இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

குறைந்தது 90 ரூபாய் முதல் 150 ரூபாய்க்குள் இத்தகைய மீன்கள் விற்பனை செய்யப்படுவதாலும் ஆட்டிறைச்சி போல இருப்பதாலும் குறைந்த விலை என்று இந்த மீன்களை மக்கள் அதிகமாக வாங்கி உட்கொள்கின்றனர். மேலும் ஓட்டல்களில் பிங்கர் ஃபிஷ் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தவகை மீன்களை தான் பொறித்து கொடுப்பதாக கூறப்படுகின்றது.

இந்த மீனை உட்கொள்ளும் சிறுவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு இருதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அதேசமயம் பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் இந்த மீனை உட்கொள்ளும் பொழுது அவர்களுக்கு உடல் உபாதைகள் மட்டுமல்லாமல் நுரையீரல் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

இந்தகைய மீன்களின் உண்மை தன்மையை அறிந்து உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ளும் படி அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments