திருநங்கை மாணவிகள் இருவருக்கு இலவச கல்வி

0 360

திருநங்கைகளுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காத இந்த சமூகத்தில், நலிவடைந்த திருநங்கை இருவரை கரம் தூக்கி உயர்த்தும் நோக்கில் இலவச கல்வி வாய்ப்பினை லயோலா கல்லூரி வழங்கியுள்ளது.

நமது நாட்டில் ஆண், பெண் ஆகிய இரு பாலினத்தவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பும், மரியாதையும் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளுக்கு கிடைப்பதில்லை.

உரிய சலுகை கிடைக்காமல் அவதிப்படும் அவர்கள், குறுகிய சூழலில் முடங்கி கொள்கின்றனர். ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே லட்சியத்தை அடைய போராடி வெற்றி பெறுகின்றனர். அனைத்து தரப்பினராலும் போற்றப்படும் வகையில் உயர்ந்த பொறுப்புகளிலும் உள்ளனர்.

இது போன்றவர்களின் உந்துதலால் ஈர்க்கப்பட்ட திருநங்கைகள் சிலர், தடைகளை தாண்டியும் சமூகத்தில் கால் தடம் பதிக்க முற்படுகின்றனர்.

அந்தவகையில், சென்னை போரூரை சேர்ந்த திருநங்கை மிருதுளா மற்றும் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தியா ஆகியோர் 12ம் வகுப்பை முடித்து சில ஆண்டுகளாகியும், மனம் தளராது தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக லயோலா கல்லூரியில் உயர் கல்வியை தொடரும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

மிருதுளா மற்றும் தியா ஆகியோரின் ஆர்வத்தை புரிந்து கொண்ட கல்லூரி நிர்வாகம், இருவருக்கும் இலவச கல்வி வாய்ப்பை அளித்துள்ளது.

மிருதுளாவின் விருப்பத்துக்கு ஏற்ப பேச்சுலர் ஆஃப் மாஸ் மீடியா படிப்பும், தியாவுக்கு பி.ஏ பிரெஞ்ச் பாட பிரிவிலும் சேர்க்கை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்தது குறித்து மிகுந்த நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மிருதுளா, தனது குறிக்கோளை அடைந்து, சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேபோல் திருநங்கை மாணவி தியாவும், இந்த கல்வி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, வாழ்க்கையில் உயர்ந்து மற்ற திருநங்கைகளுக்கு முன் உதாரணமாய் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

இதே போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக அக்கறை கொண்ட கல்வி நிறுவனங்கள், வறுமையில் வாடும் திருநங்கைகளுக்கு கட்டணமில்லா கல்வி அளிக்க முன்வந்தால் அவர்கள் முன்னேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது நிச்சயம். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments