இம்ரான் கானை அருகில் வைத்துக் கொண்டே கண்டித்த பிரதமர் மோடி..!

0 13651

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே, அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அருகில் வைத்துக் கொண்டே, பிரதமர் மோடி கண்டித்திருக்கிறார். 

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாடு நடைபெற்று வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு, கிர்கிஸ்தான் அதிபர் வியாழக்கிழமை இரவு விருந்தளித்தார். அப்போது, பரஸ்பரம் தலைவர்கள் கைகுலுக்கி பேசிக் கொண்டனர். ஆனால், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக விளங்கும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானுடன் கைகுலுக்குவதை பிரதமர் மோடி தவிர்த்தார். 

 

இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், உடன்பாடுகளில், பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.

இதையடுத்து, மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் தாம் இலங்கைக்கு பயணமானபோது, குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு சென்றதாக தெரிவித்தார். அந்த புனிதமிக்க தேவாலயத்தில், அப்பாவி பொதுமக்களின் உயிர்களை காவுவாங்கிய, பயங்கரவாதத்தின் கோரமுகத்தை தாம் கண்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதத்தை தடுக்க, மனிதாபிமானமுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
பயங்கரவாதத்தை ஊக்குவித்து, அதற்கு நிதியளிக்கும் நாடுகளே, பயங்கரவாதத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், துணைபுரியும், நிதியளித்து ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத ஒழிப்பு பிரிவு அக்கறை காட்ட வேண்டும் என்றும், அந்த அமைப்பின் நடவடிக்கைக்கு, உறுப்பு நாடுகளுக்கு ஒருமித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள், தீவிரவாதத்திற்கு எதிராக, ஒரு சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள், குழு புகைப்படும் எடுத்துக் கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments