ராஜராஜ சோழன் குறித்து பேசிய இயக்குனர் ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்

0 3633

மக்கள் கொண்டாடும் ராஜராஜ சோழ மன்னனை விமர்சிப்பதா? என்று இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாலில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் உமர் ஃபாரூக் நினைவுநாள் பொதுக்கூட்டம் கடந்த ஜுன் 5ம் தேதி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் பற்றி அவதூறாக பேசியதாக, கலவரத்தை தூண்டும் நோக்கில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் திருப்பனந்தால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இயக்குநர் ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தேவதாசி முறை குறித்து பேசியுள்ளதாகவும், அம்முறை பல பெரும் தலைவர்களின் முயற்சியால் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் இன்றும் அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி, அதற்கான நிவாரணங்களை வழங்குவதை சுட்டிக்காட்டி, ராஜராஜ சோழனை மட்டும் விமர்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, மக்கள் கொண்டாடும் மன்னனை இவ்வாறு பேசுவதா? என கண்டனம் தெரிவித்தார். இதுபோன்று பேசுவதை மனுதாரர் தவிர்க்க வேண்டுமெனவும் நீதிபதி அறிவுறுத்தினார். 

இதையடுத்து அரசுத்தரப்பில் பா.ரஞ்சித்திற்கு முன்ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஜுன் 19ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்குமாறு இரு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவரை திருப்பனந்தாளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பா.ரஞ்சித்தை கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இது தொடர்பாக காவல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments