கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

0 668

சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கான கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய, சீன அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இரு நாட்கள் நடைபெறுகிறது.

சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான்,கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளை கொண்ட அந்த அமைப்பின் கூட்டம் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில்  தொடங்கி உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி  டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். 

imageடெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி பாகிஸ்தான் வான் பரப்பின் வழியே செல்வதை தவிர்த்து, ஓமன், ஈரான் வழியாக கிர்கிஸ்தான் சென்றார்.  மதியம் 2.30 மணி அளவில் பிஷ்கேக் விமான நிலையத்தில் இறங்கிய மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வியாழக்கிழமை மாலை 4.50 மணியளவில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாலை 5.30 மணியளவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மாலையில் கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி மாநாட்டிலும் பங்கேற்றார்.

கூட்டத்தில் பார்வையாளராக பங்கேற்றுள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கானி, ஈரான் அதிபர் ஹாசன் ருகானி ஆகியோரையும் மோடி சந்தித்தார்.

சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டம் 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும், வளர்ச்சியை மேம்படுத்துவது, பயங்கரவாத த்திற்கு எதிராக ஒன்று பட்டு செயல்படுவது ஆகியவை குறித்து பிரதமர் மோடி பேச உள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல் நாளிலேயே 5 நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

14-ம் தேதி அன்று கிர்கிஸ்தான் - இந்தியா தலைவர்கள் இருவரும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் இந்தியா- கிரிகிஸ்தான் வர்த்தக அமைப்பை இருநாட்டு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.

கிர்கிஸ்தானின் பிஷ்கேக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங் இடையிலான பேச்சுவார்த்தை இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் விதத்தில் இருந்தது என்றார். தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு மோடி விடுத்த அழைப்பை ஜின்பிங் ஏற்றுக் கொண்டதாக அவர் கூறினார்.

இந்தியாவில் சீன வங்கியை தொடங்குவது, பயங்கரவாதி மசூத் அசார் விவகாரம் குறித்து தலைவர்கள் இருவரும் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்திய எடுத்த முயற்சிகளை பாகிஸ்தானின் செயல்கள் வீணாக்கி விட்டதாகவும், பயங்கரவாதத்தை முற்றிலும் ஒடுக்காத வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றும் ஜின் பிங்கிடம் மோடி தெளிவு படுத்தியதாக விஜய் கோகலே தெரிவித்தார்.

இதே போன்று ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையின் போது, அமேதியில் துப்பாக்கி தொழிற்சாலை தொடங்க ரஷ்யா முன்வந்து உள்ளதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார் என்றும், ரஷ்யாவில் செப்டம்பர் மாதம் நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார அமைப்பு மாநாட்டில் பங்கேற்க புதின் விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக் கொண்டதாகவும் விஜய் கோகலே கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments