நயன்தாரா, அனுஷ்கா காணாமல் போனால் தான் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? உயர் நீதிமன்றம் கண்டனம்

0 2513

நயன்தாரா, அனுஷ்கா போன்ற நடிகைகள்  காணமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? சாதாரணமானவர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காதா? என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தனது 19 வயது மகள் காணாமல் போனதாக திருசெங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை மகேஸ்வரி தாக்கல் செய்தார்.

அதில், தனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் ஆனால் மனுகுறித்த விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  தெரிவித்தார். நான்கு மாதத்திற்கு முன்னர் அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாதாரண மக்கள் புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கைகள் இப்படி தான் இருக்குமா? என்றும் வினவினர்.

நான்கு மாதங்களாக இளம் பெண்ணை மீட்க  நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட போலீசாரின் உறவினர்கள் அல்லது அவர்கள் வீட்டில் யாரேனும் காணாமல் போய் இருந்தால் இப்படித்தான் சாதாரணமாக  எடுத்து கொள்வார்களா? எனவும் கேட்டனர்.

நயன்தாரா, அனுஷ்கா போன்ற திரைபட நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால்  மட்டுமே காவல் துறை செயல்படுமா? என கேள்வி எழுப்பினர். வாங்கும் சம்பளத்திற்கு அதிகாரிகள் உண்மையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இல்லை எனில் அதற்கான பலன்களை அவர்கள் அனுபவிப்பார்கள் என எச்சரித்தனர்.

இளம்பெண் காணாமல் போன புகார் தொடர்பாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, விசாரனையின் தற்போதைய நிலை தொடர்பான விவரங்களை அறிக்கையாக வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments