என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 7 இடங்களில் சோதனை

0 224

என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் நேற்று சோதனை நடத்திய நிலையில், கோவையில் இன்று 3 பேரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

கோவை உக்கடத்தை சேர்ந்த முகமது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா, இப்ராகிம் என்ற ஷாஹின்ஷா, போத்தனூர் சாலையை சேர்ந்த அக்ரம் சிந்தா, போத்தனூர் உமர் நகரை சேர்ந்த சதாம் உசேன், குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் உள்ளிட்டோர் மீது தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் கடந்த 30ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரும் அவர்களது கூட்டாளிகளும், தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-சின் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

ஏமாந்த இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ப்பது, அதன் மூலம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம், கேரளத்தில் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றுவது என்ற எண்ணத்தோடு, சமூக வலைத்தளங்களில் ஐஎஸ்ஐஎஸ்-சின் கருத்துகளை பரப்பி வந்ததாக தகவல் கிடைத்ததாகவும் என்ஐஏ கூறியுள்ளது. "ஐஎஸ்ஐஎஸ் கேரளா-தமிழ்நாடு பிரிவு வழக்கு" என என்ஐஏ குறிப்பிடும் இந்த வழக்கில், முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அசாருதீன், ஒரு குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் ஐஎஸ்ஐஎஸ் கருத்துகளை பரப்பியதாகவும், இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட மதகுரு சஹ்ரான் ஹசீமின் ஃபேஸ்புக் நண்பராக இருந்ததாகவும் என்ஐஏ கூறியுள்ளது.

மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இப்ராகிம் என்ற ஷாஹின்ஷா, "ஐஎஸ்ஐஎஸ் காசர்கோடு வழக்கு" என ஏற்கெனவே என்ஐஏ விசாரித்து வரும் வழக்கில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்ததாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோவையில் நேற்று 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் மொபைல் போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவுகள், மெமரி கார்டுகள், லேப்டாப்புகள், சிடி, டிவிடிகள், ஆவணங்கள், 300 ஏர்கன் பெல்லட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

அசாருதீனை மட்டும் கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், மற்ற 5 பேரையும் விசாரணைக்கு என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டனர். மேலும், 6 பேரிடம் நேற்று நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், உக்கடம், கரும்படை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ((ஷாஜகான், முகமது உசேன், சபியுல்லா ஆகிய)) 3 பேரின் வீடுகளில் கோவை மாநகர காவல் துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ள மூன்று பேரும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வந்ததாக சொல்லப்படுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments