ஹாங்காங் போராட்டத்தில் மிக மோசமான வன்முறை

0 616

ஹாங்காங்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மிக மோசமான வன்முறை வெடித்ததை அடுத்து பெரும்பாலான அலுவலகங்கள் மூடப்பட்டன. 

ஹாங்காங்கில் கைதாகும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் அல்லது குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கும், ஒப்படைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிறன்று தொடங்கிய போராட்டத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் திரண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஞாயிறைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் மக்கள் பிரம்மாண்டப் போராட்டங்களில் ஈடுபடுவதும் போலீசார் கண்ணீர் புகை குண்டு, பெப்பர் ஸ்பிரே உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி களைப்பதுமாக இருந்தது.

புதனன்று நடந்த பிரம்மாண்டப் போராட்டத்தில் ஈடுபட வந்த போராட்டக்காரர்கள், கண்ணீர் புகை குண்டு, பெப்பர் ஸ்பிரேயால் பாதிக்காமலிருக்க முகமூடியையும், சுவாசம் மற்றும் கண் கவசங்களையும் அணிந்து வந்தனர்.

அரசு தலைமை அலுவலகம் நோக்கி முன்னேற முயன்ற அவர்களை போலீசார் தடுப்புக்களை அமைத்து தடுத்தனர். மீறி முன்னேறியதால் அவர்கள் மீது போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் தாங்கள் பாதுகாப்புக்குக் கொண்டு வந்த குடையைக் கவசமாக்கி தொடர்ந்து தடுப்புக்களைத் தாண்டி முன்னேறினர்.

கூட்டத்தைக் களைக்க கண்ணீர் புகை குண்டு, பெப்பர் ஸ்பிரே கைகொடுக்காது என உணர்ந்த போலீசார், ரப்பர் தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். குடைகளைக் கொண்டு தாக்கிய போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டதால் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.

போராட்டக்காரர்களை பெரும்பாலும் விரட்டியபோதும், நகர மறுத்த சிலர் போலீஸ் பாதுகாப்பில் ஒரே இடத்தில் அமரவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டம் நடந்த மத்தியப் பகுதியில் பெரும்பாலான கடைகள், அரசு அலுவலகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஹெச்.எஸ்.பி.சி. உள்ளிட்ட வங்கிகள் தங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments