குஜராத் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்கிறது வாயு புயல்

0 684

வாயு புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்க உள்ள நிலையில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்து உள்ளனர். 

அரபிக்கடலில் உருவான வாயு புயல், நேற்று அதி தீவிர புயலாக மாறியது. குஜராத் மாநிலம், வெராவல் மற்றும் துவாரகா இடையே இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மிக பலத்த மழையுடன் மணிக்கு 170 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், புயல் கரையை கடந்த பிறகும் 24 மணி நேரத்துக்கு அதன் தாக்கம் இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

புயல் நெருங்கி வருவதை அடுத்து குஜராத் மாநிலத்தில் கட்ச், மோர்பி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் சுமார் மூன்று லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு 700 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 52 குழுக்களும், முப்படைகளின் மீட்பு குழுக்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கட்ச், ஜாம்நகர், ஜுனாகத், போர்பந்தர், ராஜ்கோட் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.போர்பந்தர், டையூ, பாவ் நகர், காசாட், கண்டலா ஆகிய 5 விமான நிலையங்கள் இன்று நள்ளிரவு வரை மூடப்பட்டிருக்கும் என இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் வாயு புயல் கரையை கடக்கவிருப்பதால், அரசிடமிருந்து அவ்வப்போது வெளியாகும் அறிவுறுத்தல்களின்படி மக்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments