இந்திய விமானப்படையில் தொடர்கதையாகும் விபத்துகள்

0 761

விபத்தில் சிக்கிய விமானப்படையின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் இந்த மாத த்தில் இதுவரை ஒன்பது போர் விமானங்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் விபத்துகளின் மூலம் இந்திய விமானப்படை இழந்துள்ளது. 

இந்திய விமானப்படை விமானங்கள் விபத்தை சந்திப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் விமானப்படை தளத்தில் இருந்து போர் விமானம் ஒன்று பயிற்சிக்காக புறப்பட்டது. ஜாகுவார் ரக விமானம் குஷிநகர் அருகே பறந்த போது எந்திர கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்.விபத்தில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்த அந்த விமானத்தின் மதிப்பு 94.30 கோடி ரூபாய்.

அந்த விபத்து நடைபெற்ற மூன்று நாட்கள் கடந்த நிலையில் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி அன்று பெங்களூரு ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்கான புறப்பட்ட விமானப்படையின் மிராஜ்-2000 விமானம் ஒன்று எந்திர கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தை இயக்கிய இருவரும் உயிரிழந்தனர். அந்த விமானத்தின் விலை 129.52 கோடி ரூபாய்.

அதே மாதம் 12-ஆம் தேதி  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் படைத்தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்ட விமானப்படையில் மிக் -27 ரக போர் விமானம், பொக்ரானை அடுத்த  எடா கிராமத்தின் அருகே விழுந்து நொறுங்கியது. விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பி, ரூ 16.14 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த விமானம் முற்றிலுமாக நாசமானது.

பிப்ரவரி மாதம் 19-ம் தேதி பெங்களூரு அருகே உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் சூரியகிரண் என்ற விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது. அப்போது ஹவாக் ரக போர் விமானங்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று மோதியதில், ஒரு விமானி உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். இரண்டு விமானங்களும் எரிந்து நாசமாகின. அந்த இரு விமானங்களும் தலா 170 கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை. 

அந்த மாதம் 27-ஆம் தேதி அன்று பாகிஸ்தான் விமானங்களை எதிர்கொண்டு தாக்கி விரட்டிய போது, தமிழக வீர ர் அபிநந்தன் இயக்கி மிக் 21 ரக பைசன் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்வெளி போரில் இந்தியா இழந்த அந்த விமானத்தின் விலை 10 கோடி ரூபாய்.

பிப்ரவரி மாதத்தின் 27-ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் அருகே உள்ள காரன்ட்காலன் கிராமத்தின் மீது பறந்த போது விமானப்படையின் எம்ஐ -17 ரக ஹெலிகாப்டர் ஒன்று தொழில் நுட்ப கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். அந்த ஹெலிகாப்டரின் விலை 120 கோடி ரூபாய்.

மார்ச் மாதம் 14-ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் அருகே உள்ள நல் விமானப்படை தளத்தில் இருந்து மிக் -21 ரக போர் விமானம் பயிற்சிக்காக புறப்பட்டது. அந்த விமானம் பிகானீர் அருகே எந்திர கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. பாரசூட் மூலம் குதித்த தால் விமானி தப்பி விட விட, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த விமானம் முற்றிலுமாக சேதமடைந்தது.

மார்ச் மாதம் 31-ஆம் தேதி அன்று, இந்திய விமானப்படையின் மிக் -27 ரக விமானம் ஒன்று ராஜஸ்தானின் உடார்லி விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது.  ஜோத்பூர் அருகே சென்ற போது எந்திர கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியது. விமானி பாரசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். விபத்தில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்த அந்த விமானத்தின் விலை 16.14 கோடி ரூபாய்.

ஏப்ரல், மே மாதங்களில் எந்த போர் விமானங்களை இழக்காத இந்திய விமானப்படை இந்த மாதம் 3-ஆம் தேதி மற்றொரு விமானத்தை இழந்துள்ளது. அசாம் மாநிலத்தின் ஜோர்கட்டில் இருந்து அருணாச்சலபிரதேசத்தின் மன்சுக்காவுக்கு சென்ற விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் அடர்ந்த வனப்பரப்பில் விழுந்து நொறுங்கியது. புறப்பட்ட 33 நிமிடங்களில் எல்லாம் விபத்தை சந்தித்த அந்த விமானத்தில் பயணித்த 13 பேர் கதி என்ன என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

1932-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை, 1935 ஆம் ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டின் இந்த நாள் வரை எதிர்கொண்ட விபத்துகளின் மொத்த எண்ணிக்கை 2173 என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments