எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிரான வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு நோட்டீஸ்

0 231

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த செல்லம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதற்கான 700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்துகிறது என்றும், இதற்காக நீர்நிலைகள், வனம், பவளப்பாறைகள் உள்ளிட்டவை வழியாக எரிவாயு குழாய் அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

எரிவாயு குழாய் பதிப்பதற்காக விளை நிலங்களை கையகப்படுத்த நீதிமன்றத்தில் இடைக்கால தடையாணை பெறப்பட்டுள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.

எரிவாயு குழாய் அமைக்க ராமநாதபுரம்- தூத்துக்குடி வழித்தடத்துக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழங்கு முறை வாரியத்திடம் அனுமதி பெறப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் கடந்தாண்டில் உத்தரவிட்டுள்ளதாகவும், இதை ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments