கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் புகுந்து 10 வீடுகள் சேதம்

0 472

கன்னியாகுமரி அருகே, கடல் சீற்றத்தால் மீனவ கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து 10 வீடுகள்  சேதமாகியுள்ளன. 

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததையொட்டி அரபிக் கடல் பகுதியில் புயலாக மாறியது. இதன் எதிரொலியாக கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்துவருவதுடன், கடலும் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், அங்குள்ள வல்லவிளை எனும் கடலோர மீனவ கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்து 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீட்டிலிருந்த உடைமைகளும் சேதமாகின.

வீடுகளில் இருந்தோர் அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடல் அரிப்பைத் தடுக்கும் வண்ணம் இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதகை மாவட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை காரணமாக, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் குற்றாலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை பெய்தது. கன மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. 

குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குளுமையான சூழல் நிலவுவதையொட்டி இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நெல்லை மாவட்டம், தென்காசியில் லேசான காற்றுடன் சாரல் மழை பெய்தது. பேருந்து நிலையம், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 

கன்னியாகுமரியில், கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கனமழை பெய்வதால், கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், புகழ்பெற்ற சுற்றுலாதலமான
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் இரண்டாவது நாளாக தடை விதித்துள்ளது. இதனால் அருவி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments