குழந்தை தொழிலாளர் முறை தீர்வு தான் என்ன?

0 546

லகெங்கும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகின்ற நிலையில், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய தேவை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

நாம் கடந்து செல்லும் சாலையோரங்களில் உள்ள தேநீர் கடைகளிலோ, வாகன பழுது நீக்கும் மையங்களிலோ, ஜவுளிக்கடையிலோ, பட்டறைகளிலோ.... குழந்தை தொழிலாளர்களைக் காண முடியும்... அண்மையில், சென்னை புரசைவாக்கம் வட்டாட்சியரால் பானிபூரி தொழிற்சாலை ஒன்றில் 11 குழந்தைகளும் , மாதவரத்தில் சில குழந்தை தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தில் 2016ம் ஆண்டில் மேற்கொண்ட திருத்தத்தின்படி , 14வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்த தொழிலிலும் ஈடுபடுத்தக்கூடாது எனவும் 14 முதல் 18வயதுக்குட்பட்ட குழந்தைகளை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது . இச்சட்டத்தை மீறினால் 50ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும் விதிக்க சட்டப்படியான வாய்ப்புகள் ஒருபுறமிருக்க சட்டத்திற்கு புறம்பாக இன்றும் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன .

சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தொழிலாளர்களாக பயண்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் மாவட்ட அமலாக்க குழு திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு பல பகுதிகளில் இருந்து குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை விளக்கமளிக்கின்றது.

குறிப்பாக, 2017 2018ம் நிதியாண்டில் 59 குழந்தைகளும் 2018 2019ம் ஆண்டில் 70 குழந்தைகளையும் மீட்டு கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு இதுவரை இதுபோன்று மீட்கப்பட்டு கல்வி பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே 6462 எனவும் தொழிலாளர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், 2018, 2019ம் ஆண்டில் 14 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் 3லட்சத்து 30ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தைகள் மீட்கப்படுவது ஒருபுறமிருந்தாலும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க தவறிவிடுவதால் மீண்டும் கல்வி தடைப்பட்டு தொழிற்சாலைக்கே திரும்பும் நிலை பல பகுதிகளில் நடைபெற்று வருவதாக கூறும் குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன், கிராம அளவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் முறையாக செயல்படுத்துவதை உறுதிபடுத்த வேண்டும் என்கிறார்.

குழந்தைகள் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டுமெனில், சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு 18 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் வேலை பார்க்க அனுமதிக்க கூடாது எனவும் கட்டாய கல்வி வயது வரம்பை 18 வயதாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையரகம் உருவாக்க வேண்டும் என கோருகின்றனர்.

கல்வி பயிலவும், ஆடல் பாடல் என கடக்க வேண்டிய பருவத்தை தொழிலாளியாக கடக்க நேர்ந்தால் குழந்தைகள் உடல்ரீதியாக பாதிக்கப்படுவதோடு உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படும் .

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments