மின்வாரிய உதவிப்பொறியாளர் பணி நியமனம் என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது

மின்வாரிய உதவிப்பொறியாளர் பணி நியமனம் என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மின்வாரிய உதவி பொறியாளர் பணிக்கான தேர்வில், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்து, இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட உத்தரவிடவேண்டும் எனவும், அதுவரை தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு பட்டியல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கவேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வு பட்டியலில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக மின்வாரிய தலைமை பொறியாளர் 2 வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, பணி நியமனம் என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தெரிவித்தார்.
மேலும் தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
Comments