சந்திரயான் -2 விண்கலத்தை ஏவ தயாராகிறது இஸ்ரோ

0 555

ந்திராயன் -2 விண்கலத்தை அடுத்த மாதம் ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்த திட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், வெற்றிகரமாக திட்டத்தை முடிக்க உதவும் கருவிகள்.

பூமியின் ஒரே ஒரு துணைக்கோளான நிலாவில் இதுவரை வேறு எந்த நாடும் மேற்கொள்ளாத ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதற்காக சந்திரயான் -2 விண்கலத்தை அடுத்த மாதம் 9-ஆம் தேதி விண்ணில் ஏவ உள்ளது. இதற்கான முன்னோட்ட சோதனைகள் முடிந்து வருகிற 19-ஆம் தேதி பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு ராக்கெட் கொண்டு வரப்படும். அங்கிருந்து வருகிற 20-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு ராக்கெட் மற்றும் விண்கலம் கொண்டு செல்லப்படும்.

அடுத்த மாதம் 9-ஆம் தேதி சந்திரயான் -2 விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். ஆனால் இந்த திட்டத்தில் இஸ்ரோ ஏழு முக்கிய சவால்கள் சந்திக்க வேண்டியது உள்ளது.

முதல் சவால், பூமிக்கும், நிலாவுக்கும் இடையிலான தூரத்தை மிகச்சரியாக கணிப்பது. இரண்டுக்கும் இடையே 3,844 லட்சம் கிலோ மீட்டர் தூரம் இருந்தாலும், பூமியும், சந்திரனும் சுழன்று கொண்டே இருப்பதால், விண்கலம் இறங்க வேண்டிய இடத்தை மிக சரியாக கணிக்க வேண்டும். மேலும் நிலாவின் ஒவ்வொரு இடத்திலும் அதன் ஈர்ப்பு விசை மாறுபடும்.

இதே போன்று விண்வெளியில் உள்ள சூரிய கதிர் வீச்சு உள்ளிட்ட அம்சங்களும் விண்கல பாதையில் தடங்கலை உருவாக்கும். இவற்றை சமாளித்து வெற்றி காண்பது முதல் சவால்.

இரண்டாவது சவால் , தூர விண்வெளி பயணத்தில் தகவல் தொடர்பை தொடர்ந்து பராமரிப்பதும், கையிருப்பில் உள்ள எரிபொருளை சிக்கனமாக கையாள்வதும் ஆகும். தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அனுப்பும் கட்டளை ஓரிரு நிமிட தாமத்திற்கு பின்பே விண்கலத்தை சென்று அடையும். இந்த இடைவெளியை சரியாக கணித்து, தகவல் தொடர்பை முறையாக பராமரிக்க வேண்டும்.


மூன்றாவது சவால், சுழன்று கொண்டே இருக்கும் நிலாவில் எந்த இடத்தில் தரையிறங்குவது என்பதை முன்கூட்டியே மிகச்சரியாக கணிப்பது ஆகும். நான்காவது சவால், நிலாவின் ஒவ்வொரு இடத்திலும் நிலவும் ஒவ்வொரு விதமான ஈர்ப்பு விசை, அதன் சுற்றி வரும் விண்கலத்தை பாதிக்கும்.

மேலும் 100 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்து சுற்றி வரும் விண்கலத்தின் பாதை நெடுகிலும் மாறுபடும் தட்ப வெப்பத்தை மிகச் சரியாக கணிப்பதும் சவாலாகும்.

ஐந்தாவது சவால், நிலாவில் தரையிறங்குவது. நிலாவில் உள்ள தகவல் தொடர்பு கிடைக்காத இடத்தில் தரையிறங்கினால் மொத்த திட்டமும் பாழாகி விடும்.

ஆறாவது சவால், நிலாவின் புழுதி. விண்கலம் தரையிறங்கும் போதும், அங்கு ஊர்ந்து ஆய்வு செய்யும் போதும் புழுதி பறக்கும். அந்த புழுதி விண்கல கருவிகளில் படிந்தால் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும்.

அத்தோடு, கருவிகளின் இயக்கமும் பாதிப்பிற்கு உள்ளாகும். ஏழாவது சவால், நிலாவில் ஒரு நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம். அங்கு பகல் நேரத்தில் உருவாகும் அதீத வெப்பம், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப விண்கலத்தின் செயல்பாட்டை தகவமைப்பது இறுதி சவாலாகும்.

இந்த சவால்களை எதிர்கொண்டே இஸ்ரோ நிலாவுக்கு விண்கலத்தை அனுப்ப உள்ளது. இந்த விண்வெளி பயணத்தில், 13 முக்கிய கருவிகளை சந்திரயான் -2 விண்கலத்தில் வைத்து இஸ்ரோ அனுப்ப உள்ளது.

இதில் நிலாவை சுற்றி வரும் விண்கலத்தில், நிலாவின் தரை பரப்பை முப்பரிமாணத்தில் படம் பிடிக்கும் கேமிரா, நிலாவின் பாறைகளை ஊடுருவி ஆராயும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், நிலாவில் விழும் சூரிய கதிர்களை ஆராயும் சூரிய எக்ஸ் ரே கண்காணிப்பு கருவி, நிலாவை படம் பிடிக்கும் உயர் தொழில் நுட்ப கேமிரா, தண்ணீர் மூலக்கூறுகளை கண்டறிய உதவும் அகச்சிவப்பு கதிர் வீச்சு கருவி, நிலாவின் புறச்சூழலை ஆராயும் கருவி, நிலாவின் புறவெளியில் காணப்படும் அணுக்களின் தன்மயை ஆராயும் கருவி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

இதே நேரத்தில் நிலாவில் தரையிறக்கும் கலத்தில், நிலாவின் புறச்சூழல், அணுக்களின் தன்மையை ஆராயும் கருவி, நிலாவின் தட்ப வெப்பத்தை அளக்கும் கருவி, அதன் துருவங்களில் உள்ள நிலவரத்தை கணிக்கும் கருவி, நிலாவில் விழும் சூரிய கதிரின் வீரியத்தையும், நிலவின் தரையின் தன்மை, மேல் பரப்பில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை ஆராயும் கருவிகள் இருக்கும்.

நிலாவில் ஊர்ந்து சென்று ஆராயும் கலத்தில், நிலவின் தரையில் கலந்துள்ள வேதிப்பொருட்களை அடையாளம் காணும் லேசர் மூலம் இயங்கும் ஸ்பெக்ட்ரோ மீட்டர், பாறை மற்றும் மண்ணில் கலந்துள்ள தனிமங்களை பிரித்து அறியும் எக்ஸ்ரே கருவி ஆகிய முக்கிய கருவிகள் இருக்கும்.

இவற்றின் மூலம் நிலாவின் புறச்சூழலிலோ, அதன் தரையிலோ, அல்லது அடியிலோ நீர் மூலக்கூறுகள் உள்ளதா, என்னென்ன தனிமங்கள் அங்கு உள்ளன, தட்ப வெப்பம் எப்படி உள்ளது, நிலாவின் துருவங்களின் நிலவரம் என்ன என்பது உள்ளிட்ட ஆய்வுகளில் இஸ்ரோ ஈடுபட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments