மருத்துவர் இல்லாததால் மூடிக் கிடக்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பிரிவு

0 507

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன் பிரிவில் மருத்துவர் இல்லாததால் 3 மாதங்களாக மூடியே கிடப்பதாகவும் உடனடியாக மருத்துவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. 

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதிலுமிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். முதுகு தண்டுவடம், மூளையில் ஏற்படும் மிகச்சிறிய ரத்தக்கசிவு போன்றவற்றை கண்டறிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இதற்காக தனியார் ஸ்கேன் மையங்களைத் தேடி ஓடும் நோயாளிகள், ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். இதனைத் தவிர்க்க 5 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பிரிவு கடந்த 3 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.

ஆனால் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திர பிரிவில் மருத்துவர் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்கேன் எடுக்க வேண்டிய நோயாளிகள் தனியார் மையங்களுக்குச் சென்று 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை செலவு செய்து ஸ்கேன் எடுக்கவேண்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.

இதேபோல் சி.டி. ஸ்கேன் பிரிவில் ஸ்கேன் செய்தால் 24 முதல் 26 மணி நேரம் கழித்தே முடிவுகளை அறிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நோயின் தன்மை மாறும் சூழல் உருவாகிறது என்று கூறும் நோயாளிகள், ஸ்கேன் முடிவுகளை உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பிலும், சுகாதார துறை இணை இயக்குனர் தரப்பிலும் கேட்டபோது உரிய பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

அரசு மருத்துவமனைகளின் தரம், கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அந்த நடவடிக்கைகள் மக்களுக்கு முழுமையான பலனைத் தருவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments