ஆந்திராவில் மட்டுமின்றி தமிழகத்திலும் தனது கொடியை பாஜக ஏற்றும் - பிரதமர் மோடி

0 6527

ந்திராவில் மட்டுமின்றி தமிழகத்திலும் தனது கொடியை பாஜக ஏற்றும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 

மாலத்தீவு பயணத்தை முடித்து கொண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு, கொழும்புவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களுக்குப் பின் அந்நாட்டுக்கு செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி ஆவார். இலங்கை பிரதமர் ரனில்விக்ரமசிங்கே உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர்.

அதிபரின் மாளிகை செல்லும் வழியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் ஒன்றான புனித அந்தோணியார் ஆலயத்திற்கு பிரதமர் ரனிலுடன் சென்ற மோடி, பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலால் இலங்கையின் ஆன்மாவை ஒரு போதும் வீழ்த்த முடியாது என்றும், இலங்கை மீண்டும் எழும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் மாளிகை சென்ற மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மோடிக்கு மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு, இருதரப்பு உறவுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது தியானத்திலிருக்கும் புத்தர் சிலையை சிறிசேனா மோடிக்கு பரிசளித்தார்.

பின்னர் இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தல் உள்பட இரு நாட்டு உறவை மேம்படுத்த இந்தியா ஆதரவளிக்கும் என்று மோடி உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து இலங்கையின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சி தலைவருமான ராஜபக்சேவை மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு பாதுகாப்பு, பொருளாதா வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. சந்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் பிரதமர் மோடியை சந்தித்து, தேர்தலில் பெற்ற வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தனர்.

இலங்கை பயணத்தை நிறைவு செய்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி திருப்பதி வந்தடைந்தார். ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

திருப்பதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இலங்கையில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் வர தவறியதற்காக மன்னிப்பு கோரினார். தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் வளர்ச்சிக்காக பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆந்திராவில் மட்டுமின்றி தமிழகத்திலும் தனது கொடியை பாஜக ஏற்றும் என்று அவர் பேசினார்.

கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் திருமலையில் ஏழுமலையானை மோடி தரிசனம் செய்தார். பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments