பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு

0 520

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். 

பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்துள்ளனர். 494 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 148 இடங்கள் உள்ளன. இந்நிலையில் ரேண்டம் எண்ணை சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.

கலந்தாய்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும். அப்போது பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். பாட மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருந்தால் பிறந்த தேதி அடிப்படையிலும், அதுவும் சமமாக இருந்தால், ரேண்டம் எண் எனப்படும் சம வாய்ப்பு எண் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதாகவும், அதற்காக சென்னையில் கூடுதலாக அண்ணா நூற்றாண்டு நூலகம், பிர்லா கோளரங்கம், தரமணி பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் 3 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பொறியியல் படிப்பு கட்டண உயர்வு இருக்குமா என்ற கேள்விக்கு அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கட்டண உயர்வு மாணவர்களை பாதிக்கும் அளவிற்கு இருக்காது என்றும் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளின் அழுத்தம் இருப்பதாக சுரப்பா கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்த அரசியல்வாதி யார் என்று அவரிடம் கேட்டிருக்க வேண்டும் எனக் கூறினார். பின்னர் ஏன் அவர் அழுத்தமில்லை என மாற்றி கூறினார் என்றும் கேள்வி எழுப்பினார். சுரப்பா சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டே நடக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்கள் மதிப்பெண் முறைகேடு விவகாரத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக மட்டுமே சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments