குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் நடந்து செல்லும் சிறுத்தைப் புலிகள்

0 839

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச்சோலை என்ற இடத்தில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால்  இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

வன விலங்குகளை வனத்திற்குள் தேடிச் சென்றாலும் காண்பது அரிது. அதிலும் அரிது கருஞ்சிறுத்தைகளைக் காண்பது. கருச்சிறுத்தைகள் பிறக்கும் போதே கருமை நிறத்துடன் பிறப்பதில்லை. சிறுத்தைகளாகப் பிறக்கும் அவை, வளர்சிதை மாற்றம் காரணமாக கருமை நிறத்தை அடைகின்றன. மெலனின் என்ற கருநிறமியின் தாக்கம் அதிகம் உள்ள சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகளாக உருவாகின்றன. இந்தியாவில் அவை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாக வனத்துறையால் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குன்னூர் - கோத்தகிரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வண்டிச்சோலை என்ற இடத்தில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படும் நிலையில், வழக்கமான சிறுத்தையுடன் கருஞ்சிறுத்தை நடமாடி இருப்பது வியப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த 29ஆம் தேதி இரவு கருஞ்சிறுத்தையும், சிறுத்தையும் ஒன்றாக சாலையைக் கடந்து சென்று இருப்பது, குன்னூரில் தங்கும் விடுதி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்த போது கருஞ்சிறுத்தை நடமாடும் அரிய காட்சி கிடைத்தது. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து நாய்களை அவை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. கஞ்சிறுத்தையும், சிறுத்தையும் ஊருக்குள் நுழைந்ததைக் கண்டு பொதுமக்கள் ஒரு புறம் அச்சத்தில் இருந்தாலும், அழிந்து வரும் இனமான கருஞ்சிறுத்தை கண்ணில் தென்பட்டு இருப்பது வனத்துறை மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே கருஞ்சிறுத்தைக்கும், கருஞ்சிறுத்தையால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments