கோமதி மாரிமுத்து பதக்கம் பறிபோகிறது?

0 19473

மிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால் அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் பெற்ற தங்க பதக்கமும் திரும்ப பெறப்படும் என்று கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டம் முடிகண்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, அண்மையில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார். இதில் பங்கேற்பதற்கு முன்னதாக அவருக்கு ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் பட்டியாலாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த இந்திய தடகள சம்மேளனக் கோப்பைப் போட்டிகளுக்கு முன்னதாகவும் அவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. தற்போது அதன் முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த இரு ஊக்கமருந்து பரிசோதனைகளிலும் கோமதி மாரிமுத்து தோல்வி அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்பவர்கள் பயன்படுத்தும் அனபோலிக் ரக ஊக்கமருந்தை கோமதி பயன்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தற்போது அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள  கோமதி, ஊக்கமருந்தை தன் வாழ்நாளில் பயன்படுத்தியதே இல்லை என்றும், இதுகுறித்து தடகள சம்மேளனம் தனக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இரண்டாவது கட்ட சோதனை மேற்கொண்டு அதன்படி முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதை அடுத்து அவருக்கு இரண்டாவது கட்ட ஊக்கமருந்து பரிசோதனை செய்ய உள்ளதாகவும், அதிலும் அவர் தோல்வி அடையும் பட்சத்தில் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்றும் சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் அவர் வென்ற பதக்கமும் பறிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சக வீராங்கனைகளுடன் போலந்தில் கோமதி மாரிமுத்து பயிற்சி பெறச் செல்வதாக இருந்தது. ஆனால் ஊக்கமருந்து குற்றச்சாட்டு காரணமாக போலந்து பயணத்திற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் கூறப்படுவது வதந்தி என அவரது சகோதரர் சுப்ரமணி கூறியுள்ளார். கிராமத்தில் வளர்ந்த தனது சகோதரி கோழைத்தனமான இதுபோன்ற ஒன்றை செய்திருக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments