குடிசை தொழிலாக துப்பாக்கி தயாரிப்பு..! வன வேட்டைக்கு சப்ளை ?

0 1000

சேலம் வாழப்பாடி அருகே குடிசை தொழில் போல நாட்டுத்துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வன வேட்டைக்கு துப்பாக்கிகள் தயாரித்துக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெரிய குட்டி மடுவு மலை கிராமத்தை சேர்ந்த சிலர் அங்குள்ள குறிஞ்சி பிரிவு புழுதிக்குட்டை காப்புக்காட்டில் இருந்து அடிக்கடி மரங்களை வெட்டி எடுத்து செல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவத்தன்று வனத்துறை அதிகாரிகளான முருகன், ஞானராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது பெரிய குட்டிமடுவு காளியம்மன் கோயில் அருகே பெரிய மரத்துண்டு ஒன்றை சுமந்து சென்ற மர்ம நபரை வனத்துறையினர் பின் தொடர்ந்தனர். அவர் அங்குள்ள கரியான் என்பரது தோட்டத்திற்குள் நுழைந்தார். தோட்டத்தின் ஒரு பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசைக்குள் சென்று மரத்துண்டை வைத்தார்.

வனத்துறையினரும் அந்த குடிசைக்குள் புகுந்தனர். வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்த ஒரு பெண் உள்பட 3 பேர் தப்பிச்சென்று விட்டனர். அங்குள்ள பொருட்களை வைத்து அங்கு துப்பாக்கிகள் செய்யப்பட்டு வந்ததைக் கண்டு வனத்துறையினர் அதிர்ந்து போயினர்.

அங்கு 2 நாட்டுதுப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட நிலையில் 20 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வடிவமைப்பதற்கு தேவையான மரக்கட்டை, இரும்பு குழல்கள், உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.உடனடியாக வாழப்பாடி டிஎஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மலை கிராமத்தில் கள்ள துப்பாக்கி தயாரிக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டது. தோட்டத்தில் துப்பாக்கி தாயாரித்து வந்தவர் தச்சு தொழிலாளி ராமர் என்பதும் அவர் வன வேட்டைக்கு செல்லும் நபர்களுக்காக கள்ளத்தனாமாக நாட்டுத்துப்பாக்கி தயாரித்து கொடுத்து வந்ததும் தெரியவந்தது.

தப்பி ஓடிய ராமர் உள்ளிட்ட 3 பேரை பிடிப்பதற்கு வனத்துறையினருக்கு உதவியாக காவல் துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். உண்மையிலேயே வன வேட்டைக்கு மட்டும் தான் துப்பாக்கி செய்து கொடுக்கப்பட்டதா ? அல்லது இதன் பின்னணியில் நக்சல் அமைப்புகள் ஏதேனும் உள்ளதா ? என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்புக்காக அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருந்தவர்களிடம் தேர்தல் விதிமுறையை காரணம் காட்டி, துப்பாக்கியை ஒப்படைக்க வைத்தது காவல்துறை, ஆனால் பகிரங்கமாக ஒருவர் துப்பாக்கி தயாரிக்கும் பட்டறையே நடத்தி வந்த போதும் கண்டு கொள்ளாமல் விட்டு வைத்தது எப்படி ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments