ஐ.பி.எல். போட்டியை காண மைதானம் வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு

0 426

ஐ.பி.எல். போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்குள் பலத்த சோதனைக்குப் பிறகே கிரிக்கெட் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். போட்டி நடைபெறும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மொத்தமுள்ள 18 நுழைவாயில்களில் 13 நுழைவாயில்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன.

இன்று போட்டியை காண வரும் ரசிகர்களை மாலை 4 மணி முதல் மைதானத்திற்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய ஊழியர்கள் மற்றும் போலீசாரின் சோதனைக்குப் பிறகே ரசிகர்கள் உள்ளே செல்ல முடியும்.

ரசிகர்கள் கருப்புச் சட்டை அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்படும் என்றும், செல்போன், ஹெல்மெட், லேப்டாப், குளிர்பான பாட்டில்கள், வெடிபொருட்கள், தீப்பெட்டி, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், காற்று ஒலிப்பான், ஆகியவையும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளியில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், கிரிக்கெட்டுக்கு தொடர்பில்லாத வாசகங்கள் அடங்கிய பதாகைகள், விளம்பர தட்டிகள், உருவப் பொம்மைகள், கட்சிக் கொடிகள் ஆகியவற்றுக்கும் மைதானத்திற்குள் அனுமதி மறுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருப்பது, நுழைவாயிலில் நடைபெறும் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படும் என்றும், அப்போது தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், நுழைவுச் சீட்டு இல்லாமல் எந்த வயது குழந்தையும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், செல்லப்பிராணிகளுக்கும் அனுமதியில்லை என்றும் கூறியுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய அதிகாரிகள்,  உள்ளே நுழைந்த ரசிகர்கள் ஒருமுறை வெளியேறினால், மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மைதானத்திற்குள் தேவையில்லாத முழக்கங்களை எழுப்பினாலோ, தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் செயல்பட்டாலோ, அவர்கள் போலீசிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாலை 3 மணிக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தை இணைக்கும் அணைத்து சாலைகளிலும் போக்குவரத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ள போலீசார், சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள வாலாஜா சாலை, விக்டோரியா சாலை, மெரினா சாலை, மற்றும் பாரதி சாலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments