சிம்புவை காட்டி மெகா மோசடி..! போலி கல்லூரி அதிபர் மீது புகார்

0 918

லண்டனில் கல்லூரி நடத்துவதாக நடிகர் சிம்புவை அழைத்து லோகோ வெளியிட்டு விளம்பரப்படுத்திய தஞ்சை கல்லூரி அதிபர் ஒருவர், வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

தஞ்சை சரபோஜி நகரில் ருஸ்கின் கல்வி அறக்கட்டளை நடத்தி வருபவர் பிரபு. இவர் லண்டனில் வியாபார கல்வியியல் கல்லூரி நடத்துவதாக முகநூல் மற்றும் யூடியூப்பில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். இவரது கல்லூரி லோகோவை நடிகர் சிம்புவை வைத்து வெளியிட்டதாக காட்டிக்கொள்ளும் பிரபு, தன்னை ஒரு சர்வதேச தொழில் அதிபர் போல காட்டிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

நடிகர் சிம்புவை காரில் இருந்து இறக்கி லண்டனில் உள்ள ஓட்டலின் மேல் மாடிக்கு அழைத்து சென்ற போது உடன் செல்லும் பிரபு. ஆனால் அங்கு நடக்கின்ற நிகழ்ச்சியில் முக்கியமான நபர் போல இல்லாமல் ஓரத்தில் நின்றுள்ள நிலையில், தனது கல்லூரி லோகோவை சிம்பு வெளியிட்டதாக கூறி அந்த வீடியோ காட்சியை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் நடிகர் சிம்புவுடன் ஒன்றாக லிங்கா படம் பார்த்ததாக முக நூலில் பதிவிட்டு தன்னையும் ஒரு பிரபலம் போல காட்டிக் கொண்டுள்ளார் பிரபு. மேலும் இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கமான நட்பு கொண்டவர் போல புகைப்படம் எடுத்து தன்னை தானே வாட்ஸ் ஆப், மற்றும் குறுந்தகவல் மூலம் விளம்பரபடுத்தி வரும் பிரபு மீது தான் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில பணம் வாங்கிக் கொண்டு சுற்றுலா விசாவில் வெளி நாட்டிற்கு அனுப்பி ஏமாற்றி விட்டதாக தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார்கள் குவிந்து வருகின்றன.

அர்மேனிய நாட்டில் வேலை இருப்பதாகவும் தினமும் 6 மணி நேரம் மட்டுமே வேலை, மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம், தங்கும் வசதி, சாப்பாடு இலவசம், துளி கூட வெயில் கிடையாது குளு குளு வென்று இருக்கும் என்று ஆசை வார்த்தை கூறி ஒவ்வொருவரிடமும் 3 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

வேலைக்காக பணம் கொடுத்தவர்களிடம் சுற்றுலா விசாவும், சென்று திரும்ப விமான டிக்கெட்டுகள் எடுத்து கொடுத்து, அர்மேனியா நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கே போய் சேர்ந்தவுடன் பிரபுவின் ஆள் ஒருவர் வந்து தங்கும் இடத்துக்கு அழைத்து செல்கிறார். அதன் பின்னர் தான் தெரிகிறது. நாம் வந்திருப்பது இந்தியாவை விட 20 வருடங்கள் பின் தங்கிய ஒரு ஏழை நாடான அர்மேனியா என்று..!

அர்மேனியாவில் 6 ரூபாய் சம்பாதித்தால் தான் இந்திய பணமதிப்புக்கு 1 ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பணியாளர்களுக்கு இந்தியாவை விட குறைந்த கூலியே வழங்கப்படுகின்ற சூழலில் தற்காலிக வேலையாளருக்கான சான்று கிடைக்காமல் அங்கு தங்கி இருந்து தங்கள் கையில் கொண்டு போன பணத்தை செலவிட்டு, சாப்பாடு கிடைக்காமல், குளிரில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு உயிர்வாழ்ந்துள்ளனர்.

அங்கிருந்து பிரபுவை தொடர்பு கொண்டால் செல்போனை எடுப்பதில்லை என்றும் பின்னர் உறவினர்களை பணம் அனுப்ப சொல்லி சிலர் தாயகம் திரும்பியதாகவும், பலர் தாயகம் திரும்ப இயலாமல் தவிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

தஞ்சை, கடலூர், திருவள்ளூர், கோவை, சென்னை என பல ஊர்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பிரபு ஏமாற்றியதாக கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக புகார் அளிப்பவர்களுக்கு வழக்கறிஞர் மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்று அனுப்புவதை வாடிக்கையாக செய்து வருகிறார் பிரபு என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள பிரபு, இளைஞர்களிடம் பணம் பெற்றுக் கொண்டதையும் இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைத்ததையும், அங்கு சென்று வேலை தேடிக் கொள்ள அறிவுறுத்தியதையும் ஒப்புக் கொண்டார். அதே நேரத்தில் இளைஞர்கள் அங்கு தங்கி வேலைபார்க்காமல் திரும்பி வந்து விட்டதால் அவர்களது பணத்தை திருப்பி வழங்க இயலாது என்று கூறி மோசடிக்கு புது விளக்கம் கொடுத்தார்.

வெளி நாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் பணியை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அரசிடம் முறையான அனுமதி பெற்று, பணிக்கான விசாவில் எந்த நிறுவனத்துக்கு பணிக்கு அனுப்புகிறோம் என்ற பணிஆணையுடன், அந்த நாட்டின் சூழல் மற்றும் சட்ட திட்டங்களையும் முழுமையாக தெரிவித்து அனுப்ப வேண்டும் என்பதே விதி. அதை விடுத்து சுற்றுலா விசாவில் செல்வோர் அங்கு தங்கி வேலை பார்க்க இயலாது என்பதை மறைத்து மோசடியில் ஈடுபட்ட கல்லூரி அதிபர் பிரபு மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் குரலாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments