பிரதமர் நரேந்திர மோடிக்கு சியோல் அமைதி விருது..!

0 1743

மனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் மோடிக்கு தென்கொரிய அரசு சியோல் அமைதி விருது அளித்து கவுரவித்துள்ளது.

தென்கொரிய அதிபரின் அழைப்பை ஏற்று அந்நாட்டில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தமது பயணத்தின் இரண்டாவது நாளில் சியோல் நகரில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அவர் அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் மோடி, தென்கொரிய அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் அவரது மனைவியும் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றனர். 

இதைதொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தியா - தென்கொரியா இடையிலான உறவை வலுப்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு ஆகியவை குறித்து தலைவர்கள் இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

போலீஸ் துறையில் ஒத்துழைப்பு அளிப்பது, இந்தியாவில் இருந்து சென்று தென்கொரிய மன்னரை மணந்த இளவரசி சுரிரத்னாவின் நினைவாக தபால்தலை வெளியிடுவது, இந்தியாவில் கொரிய முதலீட்டை அதிகரிப்பது, தொழில் முனைவோரை ஊக்குவிக்க கொரிய தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையத்தை இந்தியாவில் அமைப்பது, மீன்வளத்துறை மேம்படுத்துவது,தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது, இரு நாட்டு அரசு தொலைக்காட்சிகளை ஒளிப்பரப்புவது ஆகிய 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, “தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் உறவில் பாதுகாப்புத்துறைதான் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். தென்கொரியாவின் தயாரிப்பான கே-9 வஜ்ரா பீரங்கி துப்பாக்கி இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதே இதற்கு சான்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு, தென்கொரிய அரசின் உயரிய விருதான சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது. இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களிப்பை வழங்கியமைக்காகவும் மோடிக்கு விருது அளிப்பதாக தென்கொரிய அரசு அறிவித்தது.

இந்நிகழ்ச்சியில் மோடியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் அடங்கிய குறும்படமும் திரையிடப்பட்டது.

விருதுடன் அளிக்கப்பட்ட ரொக்கப்பரிசான 2 லட்சம் டாலர்களை இந்தியாவில் கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிக்கு நன்கொடையாக அளிப்பதாக பிரதமர் மோடி விழா மேடையிலேயே  அறிவித்தார். 

விருதை பெற்ற பின்பு பேசிய பிரதமர் மோடி, இந்த விருது தனிப்பட்ட முறையில் தனக்காக வழங்கப்பட்டது இல்லை என்றும், 130 கோடி இந்தியர்களை இந்த விருது சாரும் என்றும் தெரிவித்தார். மதவாதமும், பயங்கரவாதமும் உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 

பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நேரம் வந்து விட்டது என்ற மோடி, மனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும் என்றார்.  இதன் மூலமாக மட்டுமே வெறுப்புணர்வை போக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

1988-ம் ஆண்டில் சியோல் ஒலிம்பிக் போட்டியின்போது இசைக்கப்பட்ட பாடலை நான்  நினைவுப்படுத்த விரும்புவதாக கூறிய பிரதமர் மோடி,  கையோடு கைகள் இணைந்து இந்த பூமிப்பந்தில் வாழும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம்,  இந்த உலகத்தை நாம் வாழ்வதற்கான சிறந்த இடமாக மாற்றிடுவோம் என்ற அந்த பாடலின் வரிகளுக்கேற்ப செயலாற்ற வேண்டிய வேளை வந்து விட்டது என்றும் தெரிவித்தார். 

உலக அமைதிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருபவர்களைப் பாராட்டும் நோக்கில், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் சியோல் அமைதி விருதை, தென் கொரிய அரசு வழங்கி வருகிறது. ஐ.நா.-வின் முன்னாள் பொதுச்செயலர் கோபி அன்னான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் உள்ளிட்டோர் இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த விருதைப் பெற்றுள்ள 14-வது நபர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments