திருபுவனத்தில் கேட்டரிங் நிறுவன உரிமையாளர் வெட்டிக் கொலை

0 1030

ஒரு தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கேட்டரிங் நிறுவன உரிமையாளர் கும்பகோணத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலால் பதற்றம் நிலவுகிறது. திருச்சி சரக டி.ஐ.ஜி தலைமையில் 2 மாவட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று தனது கேட்டரிங் நிறுவனத்திற்கு பணியாட்களை அழைத்து வர அருகே உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு தரப்பினரும் ராமலிங்கமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்தவர்கள் ராமலிங்கம் மற்றும் சிலரை அங்கிருந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பதினொரு மணி அளவில் தூண்டில் விநாயகன் பேட்டை பகுதியில் வைத்து ராமலிங்கத்தை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்த அவர்கள், ராமலிங்கம் ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததும் தப்பி ஓடியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் ராமலிங்கம் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ராமலிங்கம் உயிரிழந்துவிட்டார்.

ராமலிங்கம் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ராமலிங்கம் ஒரு தரப்பினருடன் வாக்குவாதம் செய்வது போன்ற வீடியோ வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி லோகநாதன் தலைமையில் தஞ்சை எஸ்.பி. மகேஷ் குமார், அரியலூர் எஸ்.பி சீனிவாசன், புதுக்கோட்டை ஏ.டி.எஸ்.பி இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் திருபுவனம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

உடல்கூறு ஆய்வுக்குப்பிறகு, ராமலிங்கத்தின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த நிலையில், இந்தக்கொலையை கண்டித்தும், காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரியும், கொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து காவல்துறை அவர்களை கைது செய்தனர். ராமலிங்கம் கொலையால் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து திருபுவனம் பகுதியில்,  கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments