பர்கூர் ஊசிமலையில் சங்கர மட சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாக புகார் - கார் ஓட்டுனருக்கு முன் ஜாமீன்

0 832

பர்கூர் மலை கிராமமான ஊசிமலையில் காஞ்சி சங்கரமடத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டுடன் கூடிய 32 ஏக்கர் நிலத்தை நம்பிக்கை மோசடி செய்து அபகரித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தேடப்பட்டு வந்த கார் ஓட்டுனருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை கிராமமான ஊசிமலையை பூர்வீகமாக கொண்டவர் கதிரவன். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி சங்கர மடத்தின் அறக்கட்டளை நிர்வாகி கவுரி காமாட்சியிடம் கார் ஓட்டுனராக பணிக்கு சேர்ந்துள்ளார்.

விசுவாசமாக பணியாற்றியதால் கார் ஓட்டுனர் கதிரவன் மீது கவுரி காமாட்சிக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊசிமலை மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ வசதி செய்து கொடுக்கும் நோக்கில் சங்கர மடத்துக்கு 32 ஏக்கர் நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி கதிரவன் ஊசிமலையை சேர்ந்தவர் என்பதால் அவர் மூலமாக நில உரிமையாளர்களை சந்தித்து நிலங்களை வாங்கி உள்ளனர். கதிரவன் மீதுள்ள நம்பிக்கை காரணமாக அவரிடம் பணத்தை கொடுத்து பவர் ஆப் அட்டார்னியாக அவரை நியமித்து இந்த நிலங்களை சங்கர மடம் சார்பில் கவுரி காமாட்சி வாங்கியதாக கூறப்படுகின்றது.

மேலும் அந்த இடத்தில் நிர்வாக வசதிக்காக பண்ணை வீடு ஒன்றை அமைத்த கவுரி காமாட்சி, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை அழைத்து சென்று மலைகிராம மக்களுக்கு ஆசி வழங்கியதோடு, கதிரவன் மூலமாக அந்த கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வந்துள்ளார்.

இந்த உதவிகளை எல்லாம் தான் செய்வதாக ஊர்மக்களிடம் காட்டிக் கொண்ட ஓட்டுனர் கதிரவன், கவுரி காமாட்சியை தனது மனைவி என்ற தவறான தகவலையும் பரப்பி உள்ளார்.

மேலும் தான் சென்னையில் சினிமா நடிகர்களுக்கு கேரவன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்துவருவதாகவும் தனக்கு சொந்தமாக 10 கேரவன்கள் இருப்பதாகவும் ஏராளமான சொகுசு கார்கள் இருப்பதாகவும் தெரிவித்த கதிரவன், அந்த பண்ணை வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாடகை கார்களை சுட்டி காட்டி நம்ப வைத்துள்ளார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த கதிரவனுக்கு இத்தனை வாகனங்களையும, 32 ஏக்கர் நிலத்தையும் வாங்குவதற்கும், சொகுசாக வாழ்வதற்கும் பணம் எங்கிருந்து வந்தது என்று கிராமமக்கள் கேட்காதது கதிரவனுக்கு கூடுதல் வசதியாக போய்விட்டது.

திருவனந்தபுரத்தில் உள்ள சங்கர மட கல்லூரி நிர்வாக பணிகளில் கவுரி காமாட்சி தீவிரமாக இருந்த நேரத்தில் ஊசிமலையில் உள்ள பண்ணை வீட்டுடன் கூடிய அந்த நிலத்தை பராமரிக்கும் பொறுப்பை முழுமையாக கதிரவனிடம் ஒப்படைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

கிராம மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சங்கர மட நிர்வாகம் கதிரவன் மூலம் செய்ததால் கிராம மக்கள் இது கதிரவனுக்கு சொந்தமான இடம் என்று கருதும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நிலத்தை கதிரவன் தனது பெயருக்கு மாற்றி எழுதிக்கொண்டதாக கூறப்படுகின்றது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் தான், கதிரவனின் இந்த நம்பிக்கை மோசடி விவகாரம் கவுரி காமாட்சிக்கு தெரியவர, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவரை ஓட்டுனர் மற்றும் ஊசிமலை பண்ணை வீட்டு பராமரிப்பாளர் பணியில் இருந்து நீக்கி உள்ளார் கவுரி காமாட்சி. உள்ளூர்காரர் என்பதால் கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அந்த பண்ணை வீட்டில் இருந்து கொண்டு வெளியேற மறுத்து அடம் பிடித்துள்ளார்.

இதையடுத்து அந்த நிலத்தை நம்பிக்கை மோசடி செய்து கதிரவன் அபகரித்து கொண்டதாக காவல்துறையில் கவுரி காமாட்சி புகார் அளித்தார். சொத்து தொடர்பான ஆவணங்கள் எல்லாம் காஞ்சி சங்கரமடத்திடம் இருக்க, சொத்து மட்டும் கதிரவன் பெயருக்கு மாறியது எப்படி என்று காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. காவல்துறையினர் விசாரிக்கும் தகவல் அறிந்த கதிரவன் தலைமறைவானார்.

காவல்துறையினர் பண்ணை வீட்டுக்கு விசாரணைக்கு சென்ற போது கையில் துப்பாக்கிகளுடன் இருந்த கதிரவனின் ஆதரவாளர்களான இருவரையும் கைது செய்தனர். இந்த உண்மை விவரம் அறியாத கிராம மக்கள் சிலர் கதிரவனின் சொத்தை பறிக்க தங்கள் ஊர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக எண்ணி பண்ணை வீட்டின் முன்பு போராடியதோடு, கதிரவனுக்கு ஆதரவாக காவல் கண்காணிப்பாளரிடமும் புகார்கள் அளித்துள்ளனர்.

இதற்கிடையே காவல் துறையினரின் உதவியுடன் அந்த பண்ணை வீட்டை கவுரி காமாட்சி மீட்ட நிலையில், தலைமறைவாக இருந்த கதிரவன் எம்.எல்.ஏ ஒருவரின் ஆதரவில், கவுரி காமாட்சி குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ ஒன்றையும் வெளிட்டதாக கூறப்படுகின்றது.

இதனிடையே காவல்துறையினரின் பிடியில் சிக்காமல் தலைமறவாக இருந்த கதிரவனுக்கு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைத்துள்ளது. மேலும் நம்பிக்கை மோசடி மூலம் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க கவுரி காமாட்சி சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments