காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

0 472

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை முழுவதும் நாளை 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரையில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 10 காவலர்களைக் கொண்ட குதிரைப் படையும், மணல் பரப்பில் செல்லும் 4 வாகனங்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

கலங்கரைவிளக்கம் முதல் எம்ஜிஆர் சமாதி வரை 3 கிலோமீட்டர் தொலைவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்புத் துறை சார்பில் 10 நீச்சல் வீரர்கள் மீட்பு உபகரணங்களுடன் தயாராக இருப்பார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதல் முறையாக மெரினா கடற்கரையில் ஆளில்லா விமானமும் எவ்வளவு பேர் கூடியுள்ளனர் எனக் கணக்கிடும் சிறப்பு கேமராவும் பயன்படுத்தப்படவுள்ளன.

குற்றவாளிகளை அடையாளம் காணும் பேஸ் டிடெக்சன் கேமராக்களும் பயன்படுத்தப்படவுள்ளன. குழந்தைகள் கடத்தலை தடுக்க 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு குழந்தைகளின் கைகளில் பெற்றோரின் தகவல்கள் அடங்கிய பேண்ட் கட்டிவிடப்படவுள்ளது.

இதனிடையே காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும்போது பாரிமுனையில் இருந்து வரும் வாகனங்கள் போர் நினைவு சின்னத்தில் திருப்பப்பட்டு, கொடிமர இல்லம் சாலை, அண்ணா சாலை, ஜி.பி.சாலை, மணிக்கூண்டு, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை வழியாக செல்லலாம்.

அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலை அருகில் திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை வழியாகச் செல்லலாம்.

பாரதி சாலை கண்ணகி சிலையிலிருந்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில், பெல்ஸ் சாலையில் வாகனங்கள் நுழையாமல் திருப்பப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments