சீதக்காதி படத்துக்கு 4 இடங்களில் வெட்டு...! இழுவையை குறைக்க முடிவு

0 1314

 நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 20ந்தேதி வெளியான சீதக்காதி படம் மேடை நாடகம் போல இழுவையாக இருப்பதாக எழுந்த விமர்சனத்தால் படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் அசாத்திய திறமையுள்ளவர் என்று அவரது ரசிகர்களால் புகழப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி..!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் விஜய் சேதுபதிக்கு திரை உலகில் திருப்புமுனை கொடுத்த இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி படம் கடந்த 20 ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.

சீதக்காதி படத்தில் மேடை நாடக நடிகராக வயதான தோற்றத்தில் அய்யா ஆதிமூலம் என்ற பெயரில் நடிப்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு சென்ற பல ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படத்தில் முதல் 38 நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்த விஜய் சேதுபதி அதன் பின் காணவில்லை எனவும் படம் இழுவையாக இருப்பதாகவும் பார்த்தவர்கள் விமர்சித்தனர்.

படத்தில் விஜய் சேதுபதி பல மணி நேரம் அமர்ந்து கமல்ஹாசன் போல உருவமாற்ற மேக்கப் போட்டு நாடக நடிகராக வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாகவும் விமர்சனம் எழுந்தது.இதனால் சீதக்காதி படம் ரசிகர்களின் வரவேற்பை பெற தவறியதாக கருதப்படுகின்றது.

இதையடுத்து சீதக்காதி படத்தில் இருந்து இழுவையான காட்சிகள் என்று கருதிய 12 நிமிடம் 11 நொடி காட்சிகள் வெட்டி எறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி விஜய் சேதுபதி அவுரங்கசீப் போல வேடமிட்டு நடித்துள்ள 8 நிமிடம் 32 நொடி அளவு கொண்ட மேடை நாடக காட்சிகள் , 2 நிமிடம் 13 நொடியுள்ள தனபால் சண்டைகாட்சிகள், 1 நிமிடம் 13 நொடியுள்ள அர்ச்சனாவின் கனவு காட்சி மற்றும் கிளைமாக்சில் நீதிமன்ற காட்சியில் 13 நொடி என மொத்தமாக 4 இடங்களில் கட் கொடுக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் சீதக்காதி வெளியாகி உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி திரையில் தோன்றும் காட்சிகள் 30 நிமிடமாக குறைந்து போயுள்ளது

அதே நேரத்தில் ஜெயம்ரவியின் அடங்கமறு, பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான சிவகார்த்திகேயனின் கனா படங்கள் வரவேற்பான விமர்சனத்தை பெற்றாலும், இன்றுவரை வசூலில் மாரி 2 தான் முதலிடத்தில் உள்ளது என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்

 

தமிழ் திரை உலகில் போட்டிபோட்டுக் கொண்டு ஒரே நேரத்தில் 5 படங்கள் வெளியிடப்பட்டதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற கனா படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments