மீண்டும் இலங்கை பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே

0 927

இலங்கை பிரதமராக, ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26ஆம் தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தார். அவருக்கு பெரும்பான்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தாமே பிரதமர் பதவியில் நீடிப்பதாக, ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.

இதனால், இலங்கை அரசியலில் குழப்பம் நீடித்தது. இதையடுத்து, நாடாளுமன்றத்தையும் கலைத்த சிறிசேனா, வரும் ஜனவரி மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

இலங்கை அதிபரின் தன்னிச்சையான முடிவுகளை எதிர்த்து, ரணில் விக்கிரமசிங்கே சார்பில், வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், சிறிசேனாவின் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்ததோடு, இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நீடிக்கவும் அனுமதி வழங்கியது. இதையடுத்து, தமது பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், இன்று இலங்கை பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான அலரி மாளிகையில், ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். அவருக்கு, அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்து, வாழ்த்து தெரிவித்தார். இதனால் இலங்கையில் 51 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதனிடையே, இலங்கையில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், அண்டை நாடும், நெருங்கிய நட்பு நாடுமான இலங்கையில் உள்ள அரசியல் சூழலை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

இது அனைத்து அரசியல் சக்திகளின் ஜனநாயக முதிர்ச்சியாகப் பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க இந்தியா கடமைப் பட்டிருப்பதாகக் கூறிய ரவீஸ், இரு நாட்டு உறவும் மேலும் மேம்படும் என நம்பிக்கை  தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments