தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பல்களை கையாளும் முனையம் - முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தனர்

0 1097

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், பெரிய சரக்கு  கப்பல்கள் மூலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி பணிகளை கையாளும் முனையத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தொடங்கி வைத்தனர். 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி செல்லும் சிறிய வகை கப்பல்கள் இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு சென்று அங்கிருந்து பிற நாடுகளுக்கு பெரிய கப்பல்கள் மூலம் சரக்கு பெட்டகங்கள் கொண்டு செல்லப்படும். இதனால் காலம் விரயமாவதுடன் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதாக சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்து வந்தன.

இதையடுத்து, மதர் வெசல் எனப்படும் பெரிய சரக்கு கப்பல்கள் நேரடியாக தூத்துக்குடி துறைமுகம் வந்து, நேரடியாக சரக்கு பெட்டகங்கள் ஏற்றிச்செல்லும் அளவுக்கு, (14 அடி அளவிற்கு) கடல் ஆழப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டது.

தெற்கு இந்தியாவின் நுழைவுவாயில் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பெரிய சரக்கு கப்பல் முனையத்தில், சீனா, மலேசியா நாடுகளுக்கு நேரடி பெரிய சரக்கு கப்பல் சேவை புதன்கிழமை தொடங்கியது. இதனை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், டெல்லியில் இருந்தவாறு, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மிகப்பெரிய சரக்கு கப்பல் வந்து செல்வதன் மூலம், 20 அடி நீளம் கொண்ட சரக்கு பெட்டகங்களை, 4 ஆயிரத்து 300 சரக்கு பெட்டகங்கள் என்ற அளவில், ஒரே நேரத்தில், கையாள முடியும். இதன் மூலம் சீனா, மலேசியா, போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விரைவாக நடைபெறும்.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக்கழக தலைவர் ரிங்கேஷ் ராய், துணைத்தவைர் வையாபுரி, மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments