அப்பலோ கல்லுரியின் அடாவடி வசூல்..! 20 மாணவர்கள் தவிப்பு

0 524

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அப்பல்லோ பொறியியல் கல்லூரியில் காமன் பிரேக்கேஜ் கட்டணத்தை செலுத்தவில்லை என்று 20 மாணவர்களை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 571 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கையின் போது முன்வைப்பு தொகையாக 5 ஆயிரம் ரூபாய் பெறப்படுகின்றது.

மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் கல்லூரியில் உள்ள கணினி உள்ளிட்ட ஏதாவது பொருட்களை சேதப்படுத்தி விட்டால் இந்த முன்வைப்பு தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்துக் கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் பெரும்பாலான கல்லூரிகள் தவறு செய்யாத மாணவர்களுக்கு கூட முன்வைப்பு தொகையை திருப்பிதருவது இல்லை என்று மாணவர்கள் நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி, செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களிடம் காமன் பிரேக்கேஜ் கட்டணம் என்ற பெயரில் மாணவர்களுக்கு தலா 300 முதல் 600 ரூபாய் வரை பில் இல்லாமல் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செட்டிப்பேடு பகுதியில் உள்ள அப்பல்லோ பொறியியல் கல்லூரி நிர்வாகம் ஒரு படி மேலே போய் இந்த சட்டவிரோத கட்டண வசூலுக்கு ஒத்துழைக்க மறுத்த 20 மாணவர்களை செமஸ்டர் தேர்வு எழுதவிடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த 500 ரூபாய் கட்டணத்தை செலுத்த மறுத்த இறுதி ஆண்டு படித்துவரும் ஆகாஷ் ராய் என்ற மாணவருக்கு தேர்வு நுழைவு சீட்டு வழங்கப்படவில்லை, இதனால் தேர்வு எழுத இயலாத நிலைக்கு தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ கல்லூரி சட்டவிரோத கட்டண வசூல் செய்வதாக மாணவர் ஆகாஷ்ராய் அண்ணா பல்கலைக்கழகத்திலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்

இவரை போலவே பாதிக்கப்பட்ட தாமோதரபாபு என்ற மாணவரும் இந்த அடாவடி கட்டண வசூலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக் கழகத்தில் புகார் அளித்துள்ளார்.

500 ரூபாய்க்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும்வகையில் தேர்வு எழுதவிடாமல் தடுத்து வரும் இதே கல்லூரியில் தான், சரிவர கல்லூரிக்கு வராத மாணவர்களிடம் 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பில் இல்லாமல் பணம் வசூலித்துக் கொண்டு தேர்வு எழுத அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இங்கு பணிபுரிந்த பேராசிரியர்கள் பலர் சம்பள பாக்கியால் அவதிப்பட்டதாகவும், அவர்கள் வேலையை விட்டு சென்ற பின்னரும் கூட அவர்களுடைய கல்விச் சான்றிதழை வைத்துக் கொண்டு அப்பல்லோ கல்லூரி நிர்வாகம் தரமறுப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அப்பல்லோ கல்லூரி நிர்வாகம், பிரேக்கேஜ் கட்டணம் வசூலிப்பதே இல்லை என்றும் படிப்பு முடிந்து வெளியில் சென்ற மாணவர்களின் சதி என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

மொத்தத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் நான்கரை லட்சம் மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஒரு செமஸ்டருக்கு மாணவர் ஒருவருக்கு தலா 500 வீதம் 8 செமஸ்டருக்கு வசூலிக்கப்படும் சட்டவிரோத தொகை எவ்வளவு தெரியுமா? 180 கோடி ரூபாய் என்கின்றனர் மாணவர்கள்.

இத்தனை கோடி ரூபாயும் கருப்பு பணமாக குவிக்கப்படுவதாக தெரிந்தும் அண்ணா பல்கலைக்கழகம் கண்துடைப்புக்காக விளக்கம் கேட்டுவிட்டு, நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது ஏன் ? என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments