ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை, நாளை பதவியேற்கும் என தகவல்

0 441

இலங்கையில், மகிந்த ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை, நாளை பதவியேற்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே, ரணிலையும், ராஜபக்சேவையும், சீன தூதர் தனித்தனியாக சந்தித்துப் பேசியிருக்கிறார். 

இலங்கையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று ராஜபக்சேவை புதிய பிரதமராக அறிவித்து, பதவியேற்கச் செய்தார், அதிபர் மைத்திரிபால சிறிசேனா.... இதனை ஏற்காத ரணில், தான் பிரதமராக நீடிப்பதாக அறிவித்தார். தமக்கு பெரும்பான்மை இருப்பதால், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், நாடாளுமன்றத்தை நவம்பர் 16வரை முடக்கி வைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்திருக்கிறார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக ரணில் தெரிவித்தார்..

கொழும்புவில் உள்ள டெம்பிள் ட்ரீ வளாகத்தில், தனது ஆதரவுக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கே நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஆளும் கூட்டணியில் இருந்து இலங்கை சுதந்திரக் கட்சி வெளியேறினாலும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், 106 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை ஜதிக ஹெலே உருமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுடன் எளிதாக அரசு அமைக்க முடியும் என்று ஆலோசனையில் கலந்துகொண்ட தலைவர்கள் கூறினார்கள். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், இலங்கையின் பிரதமர் யார் என்பதை, நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும் என்றும், ராஜபக்சேவை பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தார்.

 இந்நிலையில், ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை, நாளை பதவியேற்கும் என்றும், அதிபர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, இலங்கைக்கான சீன தூதர் Cheng Xueyuan, ரணில் விக்கிரமசிங்கேவையும், மகிந்தா ராஜபக்சேவையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனவுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கேக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பைத் திரும்பப் பெற்றது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமர் என்பதால், அதற்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments