இலங்கை பிரதமர் யார்?: சிறிசேனா - ரணில் விக்கிரமசிங்கே இடையே வெடித்த மோதல்

0 1361

இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்ற நிலையில், தாம் இன்னும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளதால், அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பாட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சியின் மைத்ரிபால சிறிசேனா அதிபராக வெற்றிபெற்றார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றது.

இதையடுத்து, சிறிசேனா கட்சி ஆதரவுடன், இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறிசேனா - ரணில் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், பிரதமர் ரணிலுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற சிறிசேனா, புதிய பிரதமராக, இலங்கை மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் அதிபருமான ராஜபக்சேவை நியமித்தார். இதையடுத்து, ராஜபக்சே உடனடியாக பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரணில் விக்கிரமங்கே, தாம் இன்னும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக தெரிவித்தார். ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் என கூறிய அவர், தமக்கு இன்னும் பெரும்பான்மை இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மாளிகையில் இருந்து தாம் வெளியேறப் போவதில்ல என்றும் கூறியுள்ளார்.  நாடாளுமன்றத்தில் தேவையான ஆதரவு இருப்பதால், தாமே பிரதமர் என்றும் சிறிசேனாவுக்கு, ரணில் விக்கிரமசிங்கே கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், வரும் நவம்பர் 5ஆம் தேதி கூடவுள்ள இலங்கை நாடாளுமன்றத்தில், புதிய பிரதமர் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என இலங்கை மக்கள் முன்னணி கட்சி அறிவித்துள்ளது. ஆனால் இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 19-வது பிரிவின் படி ஆட்சியில் உள்ள பிரதமரை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பிரதமர் பதவி இழக்க நேரிடும் என்றும் ரணில் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், இலங்கை அரசில் தற்போது ரணில் விக்கிரமசிங்கே மற்றும் ராஜபக்சே ஆகிய 2 பிரதமர்கள் இருப்பதால், மக்களிடையே குழப்பமும், பதற்றமும் உருவாகியுள்ளது.

இதனிடையே, இலங்கை அரசியல் கட்சிகள், அந்நாட்டு சட்டத்திட்டங்களை மதித்து செயல்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வன்முறைகளை தவிர்த்து, சட்டப்படியான நடவடிக்கைகளை இலங்கை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, பெரும்பான்மை குறித்து வாக்கெடுப்பு நடத்துவதற்காக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments