போக்குவரத்து துறையில் மாற்றத்தை கொண்டு வர அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி பேச்சு

0 888

நாட்டின் போக்குவரத்து துறையில் மாற்றத்தை கொண்டு வர அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உயிர் கழிவுகளில் இருந்து மாற்று எரிபொருள் தயாரிக்கும் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சூரிய ஒளி மின்னுற்பத்தி கூட்டமைப்பின் முதல் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை  ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரசுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் பேசிய ஆண்டனியோ குட்ரெஸ், வெப்பமயமாதலை தடுக்காமல் உலகில் அமைதியையும், வளத்தையும் பேண முடியாது என்றார். உலகின் வெப்ப மயமாதல் அபாய அளவையும் தாண்டி விட்டதாக கூறிய அவர், உலகை காக்கும் நடவடிக்கைகளில் அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்றார்.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வருங்காலத்தில் மின் உற்பத்தி சூரிய ஒளியைச் சார்ந்தே இருக்கும் என்றார். தற்போது கச்சா எண்ணெய்க்கு உள்ள முக்கியத்துவத்தை, இனி சூரிய ஒளி பெறும் என்ற அவர்,  எண்ணெய் வள நாடுகளின் இடத்தை சூரிய ஒளி மின்னுற்பத்தி நாடுகள் கைப்பற்றும் என்றார்.

பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்ற அவர், இதற்காக புதுப்பிக்க வல்ல எரிசக்தியை அதிகம் பயன்படுத்தி வருவதாக கூறினார். வருகிற 2030-ஆம் ஆண்டில் நாட்டின் மின்னுற்பத்தியில் 40 சதவிகிதம் புதுப்பிக்க வல்ல எரிசக்தி மூலமே நடைபெறும் என்றும் மோடி தெரிவித்தார்.

மின்னுற்பத்தியை போலவே, மின்சேமிப்பும் மிக முக்கியமானது என்ற மோடி, சூரிய ஒளி, காற்று மூலம் மட்டுமின்றி, உயிரி எரிபொருள் தயாரிப்பிலும் இந்தியா அக்கறை காட்டுவதாக கூறினார். நாட்டின் போக்குவரத்தில் மாற்றத்தை கொண்டு அரசு உறுதியாக உள்ளது என்ற மோடி, உயிர் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments