காட்டுத்தீயில் சிக்கியவர்களை உயிருடன் மீட்ட பயிற்சி காவலர்கள்

0 632

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை உயிரை பணயம் வைத்துமீட்டு தூளி கட்டி தூக்கி வந்த தமிழக காவல்துறையின் பயிற்சி காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது

தேனி மாவட்டம் குரங்கணி மலையில் காட்டுத்தீயில் சிக்கி காயத்துடன் செய்வதறியாது தவித்த 20 க்கும் மேற்பட்டவர்களை உயிருடன் மீட்டுக்கொண்டு வந்ததில் தமிழக காவல்துறையின் பயிற்சி காவலர்களின் பங்கு மகத்தானது.

குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 30 க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிருக்கு போராடும் தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் கிராமமக்கள் துணையுடன் தமிழக காவல்துறையின் பயிற்சி காவலர்கள் 340க்கும் மேற்பட்டோர் உடனடியாக களம் இறக்கப்பட்டனர்.

ஒருவர் மட்டுமே நடந்து செல்லும் வகையில் அமைந்துள்ள ஒற்றையடி பாதையில் காட்டுத்தீயின் தகிக்கும் வெப்பத்துக்கிடையே வெந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு அவர்களை தூளி கட்டி பத்திரமாக படுக்க வைத்து உடனடியாக மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பயிற்சி காவலர்களின் மகத்தான பணியால் 15 க்கும் மேற்பட்டோர் உரிய நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. கரடு முரடான பாதையில் அவர்களது மனித நேயம் மிக்க இந்த பணியால் பலரின் உயிர் காப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னரே மீட்பு பணியில் இராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தபட்டதாக கூறப்படுகின்றது. நிலைமை அறிந்து பொது மக்களுடன் இணைந்து மீட்பு பணி மேற்கொண்ட பயிற்சி காவலர்களை மக்களுடன் இணைந்து நாமும் பாராட்டுவோம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments