முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Apr 27, 2025
முகப்பு
“அடேய் யூடியூபர்களா. .! அவங்கள சும்மாதான் விடுங்களேன்டா”... இந்தியாவின் அபூர்வ ஆதிவாசிகள் படையெடுக்கும் யூடியூபர்கள்...
Apr 06, 2025 12:58 PM
259
காலம் காலமாக ஒதுங்கி நிற்கும் சென்டினல் தீவு இந்த மனுஷப் பயலுகளே வேணாம் என சொல்வது ஏன்?
சென்டினல் தீவு. . . 7 ஆண்டுகளுக்கு முன்பே தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது. அதற்கு அங்கு சென்ற ஒரு அமெரிக்கர் , பூர்வகுடிகளால் கொன்று புதைக்கப்பட்டதுதான் காரணம்... இந்த நிலையில் மீண்டும் ஒரு அமெரிக்க யூடியூபர் அங்கு வ்லாக் எடுக்கச் சென்று சிக்கியிருக்கிறார்... மனிதர்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்? உலகிலிருந்து அவர்கள் தனித்து வாழக் காரணம் என்ன? விடைகளை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு....
அச்சமில்லை.. ஆடையுமில்லை.. அடுத்தவர் யாரும் ஊடுருவாமல் இருப்பது மட்டுமே இந்தத் தீவு வாசிகளின் ஒரே பிரச்னை...
அப்படியே வந்தாலும் அந்த தீவின் கடைக்குட்டிப் பையன்கூட குறிபார்த்து அம்பெய்துவார்.. அந்தளவுக்கு மனிதர்களை வெறுக்கும் இந்தத் தீவு உள்ளது வேறெங்குமில்லை... இந்தியாவில்தான்... ((Google Earth Zoom in))
இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டங்களின் ஒரு குட்டித் தீவுதான் வடக்கு சென்டினல் தீவு...
இந்தத் தீவு பன்னெடுங்காலமாக வெளி ஆட்கள் யாரையும் அனுமதிப்பதுமில்லை. அவர்கள் வெளியே சென்று யாரோடும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயலவுமில்லை..
காடுகளில் யானை சஃபாரி, சிங்கத்தைக் காணும் சஃபாரி ரைடுகளையெல்லாம் சுற்றுலாவாசிகள் மேற்கொண்டதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இங்கு மனிதர்களைக் காண படகுகளில் சஃபாரி சுற்றுலா வந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர்..
பூர்வ குடி மக்கள் மட்டுமே வாழும் இந்தத் தீவுக்கருகே ஜராவாக்கள், அந்தமானியர்கள், ஓங்கேக்கள், சோம்பன்கள், நிக்கோபரியர்கள் உள்ளிட்ட பல பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர்..
சற்றே தள்ளிப் பார்த்தால் மிங்கு வா -க்கள் வசிப்பர். மனிதர்களிடம் தொடர்பு கொள்ள விரும்பாத இந்தத் தீவு மக்களை மனதில் வைத்தே ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவன் காட்சிப்படுத்தியிருப்பார்.
ஆனால், இந்த தீவு வாசிகள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டாலும் அவர்களோடு கூட தொடர்பற்றுத் தனித்துக் கிடப்பவர்கள்தான் சென்டினல் தீவு வாசிகள்..
இங்கு 1771-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி கடல் வாணிபத் தடங்களைத் தேடி வந்தபோதுதான் சமீபத்திய வரலாற்றில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது.
அவர்கள் இரவில் அந்தத் தீவைக் கடக்கும் போது நெருப்பு மூட்டப்பட்டிருப்பதும், ஆங்காங்கே கூடி அமர்ந்து உணவு சமைத்ததையும் கண்டதாகக் கூறியுள்ளனர்.
அதன் பின் 100 ஆண்டுகள் கழித்து அந்தமான் நிக்கோபரில் சிறைச்சாலை அமைத்தபோது, அங்கிருந்து தப்பி கடலில் நீந்திச் சென்ற கைதியைக் காணவில்லை..
அவரைத் தேடிச் சென்றபோதுதான் ஆடையில்லாத குட்டி மனிதன் ஒருவரை அம்பெய்து கொன்றதாக பார்த்தவர்கள் கூறியுள்ளனர்..
அந்த தீவின் கரையில் பல அம்புகள் துளைத்த கைதியின் உடலை மீட்டு வந்தனர். அவர்களுக்கு அயலார்களின் நடமாட்டம் என்றாலே அலர்ஜி என அப்போதுதான் முதலாவதாக தெரியவந்தது..
இச்சம்பவத்தை அடுத்து 100 ஆண்டுகள் கழித்து சுதந்திர இந்தியாவில் மானுடவியல் ஆய்வாளர்கள் அந்தத் தீவுக்கு சென்றனர்.
கூட்டம் கூட்டமாக அங்கு ஆட்கள் வருவதை அறிந்த சென்டினல் வாசிகள், ஓடிச் சென்று ஒளிந்து கொண்டனர்.
18 குடிசைகள்.. அந்த வீட்டின் முன் சமைப்பதற்காக எரியூட்டப்பட்ட நெருப்பு... சமைத்த மீன்கள், உணவுகள் என அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு அச்சத்தில் பதுங்கிக் கொண்டனர்.
அங்கு அவர்களுக்காக இளநீர், தேங்காய்கள், இரும்பு ராடுகள், பிளாஸ்டிக் பாத்திரங்களை தீவுக் கரையில் பரிசாக விட்டு வந்தனர்.
அதன் பின் அவர்களை நெருங்க மானுடவியலாளர்கள் மேற்கொண்ட 2 முயற்சிகளும் தோற்றன. அம்புகளையும், ஈட்டிகளையும் எய்து விரட்டி அடித்தனர் சென்டினல்வாசிகள்..
படகு கவிழ்ந்தபோது அந்தத் தீவில் சிக்கிய மீனவர்களும் கொல்லப்பட்டனர்.
1990-களில் அவர்களோடு அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளச் சென்ற மானுடவியல் ஆய்வாளர் மதுமாலா மட்டுமே அந்தத் தீவில் கால்பதித்து, அவர்களோடு பழகிய முதல் அயல் மனிதராக அறியப்பட்டார். அங்கு அவர்களுக்கு தேங்காய்களைக் கொடுத்ததோடு, அவர்களின் குழந்தைகளையும் தூக்கிக் கொஞ்சினார் மதுமாலா.
மதுமாலா குழுவினரோடு பாதுகாப்புக்குத் துப்பாக்கி ஏந்திச் சென்ற காவலரிடம் துப்பாக்கியை ஏற்கெனவே கொண்டு வந்த இரும்பு ராடு போன்ற ஆயுதம் என நினைத்து பறிக்க முயன்றனராம். ஆனால், அவர் விடாப்பிடியாக துப்பாக்கியைத் தராததால் கத்தியைக் காட்டி மிரட்டி அங்கிருந்து உடனே செல்லுமாறு சைகை காட்டினராம் அந்த தீவு வாசிகள்
அவர் திரும்பவந்ததும் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அது சென்டினல் தீவு வாசிகளுக்கு நமது உதவி தேவையில்லை. இருப்பதிலேயே பெரிய உதவி எது என்றால், அவர்களை தொந்தரவு செய்யாமல் தனித்து விடுவதே என தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.
இதை ஏற்று சென்டினல் தீவுக்கு யாரும் செல்லக்கூடாது என சட்டம் போட்டது இந்தியா...
இதற்குக் காரணம் அங்கு எத்தனையோ நூற்றாண்டுகளாகத் தனித்து வாழும் மக்களுக்கு ஃப்ளூ, அம்மை போன்ற எந்தவொரு பரவும் உயிர்கொல்லி நோய் கிருமிகளும் தாக்கவில்லை அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
அவர்களுக்கு அதற்கான தடுப்பூசி கூட போடப்படவில்லை என்பதால், மனிதர்களிடம் இருந்து பரவும் ஏதேனும் ஒரு கிருமி கூட அவர்களது இனத்தை முழுமையாக அழிக்க வல்லதாகிவிடும்.
இந்த ஆபத்தில் இருந்து அவர்களைக் காக்கவே இப்படி ஒரு அறிவிப்பை இந்தியா விடுத்தது...
ஆனால், அனைத்து தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டு அங்கு இந்தியாவின் தடுப்புச் சட்டத்தை மீறி 2018-ல், சென்ற ஒரு அமெரிக்கர் கொல்லப்பட்டார்.
உலகின் அனைத்து மூலை முடுக்கிலும் கிறிஸ்தவத்தைப் பரப்பப்போவதாக உறுதியேற்று சென்ற அவர், ‘என் பெயர் ஜான்.. எனக்கும், ஏசுவுக்கும் உங்களைப் பிடிக்கும்’ என ஆங்கிலத்தில் கத்தி அவர்கள் அருகே நெருங்கிய போது, அந்தத் தீவின் குட்டிப்பையன் ஒருவன் அம்பெய்தார்..
அந்த அம்பு அவர் மார்பில் அணைத்து வைத்திருந்த வாட்டர் புரூஃப் பைபிள் மீது பட்டதால் உயிர்தப்பி வந்தார்.
இதை தனது டைரியில் குறிப்பிட்ட ஜான், தனக்கு ஏதும் நேர்ந்தால் தனது உடலைக் கூட மீட்க முயலவேண்டாம் என எழுதிவைத்துவிட்டு மீண்டும் சென்றார்.
அவர் சொன்னது போன்றே 7 ஆண்டுகளாகியும் அம்பு துளைத்து அந்தத் தீவில் புதைக்கப்பட்ட ஜானின் உடலை இன்று வரை மீட்கமுடியவில்லை. அவர்களை அழைத்துச் சென்றவர்களும் கைதாகினர்.
இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன், சென்டினல் தீவுக்கு மைக்கைலோ ((Mykhailo)) என்ற பிரபல யூடியூபர் ரப்பர் படகில் சென்றார். பைனாகுலரில் பார்த்து நல்வாய்ப்பாக கரையில் காவலுக்கு யாருமில்லாத நேரம் அங்கு சென்று, டயட் கோக்-கையும், தேங்காயையும் பரிசாக கரையில் வைத்து விட்டு வந்துவிட்டார்.
அந்தத் தீவில் தென்னை விளையாது என்பதால் தான் பலரும் அவர்களுக்குப் பிடித்த தேங்காய்களைப் பரிசாகக் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் தகவலறிந்த அந்தமான் நிக்கோபர் போலீசார் மைக்கைலோவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர் ஏற்கெனவே தலிபான்களுடன் ஒரு நாள் என வ்லாக் போட்ட அட்வென்சர் விரும்பி யூடியூபர் ஆவார்..
ஏற்கெனவே travel, tour, transport, trade என 4 T-க்களிடமிருந்து அவர்களைக் காக்கவே இந்தியா போராடி வருகிறது..
தங்களுக்கு மட்டும் என தனித் தீவில் நிம்மதியாக வாழும் பழங்குடிகளை வியூஸ்களுக்காக தொல்லை செய்யாமலிருப்பதே நல்லது என்கின்றனர் மானுடவியல் ஆர்வலர்கள்..
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu