தேவியின் திருவிளையாடல்.. 19 அவுட்... 12 நாட் அவுட்.. தாலி கழற்றி ராணி எஸ்கேப் ..!

0 1635

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவி. செவிலியரான இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களின் வீட்டிலேயே தங்கி மருத்துவம் பார்க்கும் செவிலியர் பணியை செய்து வந்த தேவி , கடந்த நான்கு மாதங்களாக பணி இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் மாயமானார்.

தனது மகள் மாயமானதாக தாய் முனியம்மாள் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையின் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்காரரான சாய்ராம் என்ற 19 வயது இளைஞனும் காணாமல் போனது தெரியவந்தது.

போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடிவந்த நிலையில் இருவரும் வழக்கறிஞர்கள் மூலம் காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

கடந்த மூன்று மாதங்களாக சாய்ராமுடன் முறை தவறிய காதலில் விழுந்து, நெருங்கி பழகிய தேவி, அவரை சென்னைக்கு அழைத்து வந்து பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவில் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

முன்னதாக தேவி, தனது தாய்மாமனான மணி என்பவரை ஆறு வருடங்களாகக் காதலித்து ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, திடீரென சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில் இருந்து விஜய் என்ற இளைஞரும், தன்னை ஒன்றரை ஆண்டுகளாக காதலித்த தேவி, தன்னிடம் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியதாக புகார் அளித்தார். தனக்கு நியாயம் வேண்டுமென தேவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்திருந்த செல்போனுடன் காவல் நிலையத்தில் பொங்கியதால் பரபரப்பு மேலோங்கியது.

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தேவி அடுத்தடுத்து 12 இளைஞர்களைக் காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் முதலியவைகளை பெற்றுக் கொண்டதும் தெரியவந்தது.

அதற்கான ஆதாரங்களை 19 வயது இளைஞரான சாய்ராம் தரப்பில் வந்த வழக்கறிஞர்கள் புகைப்படங்களுடன் காவல் நிலையத்தில் சமர்ப்பித்ததால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண் வீட்டாரோ தங்களது மகள் அழைத்துச் சென்ற சாய்ராமை தங்களது வீட்டிற்கு மருமகனாக அழைத்துச் செல்லும் ஆவலுடன் காத்திருந்தனர்

இதனால் கோபமடைந்த காவல்துறையினர், நாங்கள் காவல்துறை வேலை மட்டும்தான் செய்கிறோம் மற்ற எந்த வேலையும் செய்யவில்லை, எங்களைப் பார்த்தால் எப்படி தெரிகிறது, ஒழுங்காக அவரவர் பெற்றோர்களுடன் செல்லுங்கள் என கூறினர்.

இருவரும் மறுத்த நிலையில், ஒரு கட்டத்தில் தான் பல்வேறு நபர்களைக் காதலித்து ஏமாற்றியது காவல்துறையினருக்கு தெரிந்து விட்டதால் தாயுடன் தன்னைக் கைது செய்துவிடுவார்களோ என்று உஷாரான தேவி, தாயுடன் தான் செல்வதாக ஒப்புக்கொண்டார்.

மனம் உடைந்த 19 வயது காதலன் திரைப்படங்களில் வருவது போல் தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு தேம்பி அழுது காவல் நிலையத்தின் வாசலில் நின்றவாறே உள்ளே இருந்த காதலியை உற்றுப் பார்த்து கொண்டிருந்தான்.

பெண் வீட்டாரோ இளைஞரைக் தாக்கவேண்டும் என பேசிக்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞன் அவர்களை முறைத்தபடி, திமிறிக் கொண்டு செல்ல முயன்றான். ஒரு வழியாக சாய்ராமை சமாதானப்படுத்தி இரு சக்கர வாகனத்தில் அவர்களது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

சென்னை முருகன் கோவிலில் முன்னின்று திருமணம் செய்து வைத்த உறவுக்கார பெண்ணே, மஞ்சள் கயிரால் ஆன தாலியை தேவியிடமிருந்து வாங்கிச் சென்றார்.

இதை அடுத்து செவிலியர் தேவியோ திமிறிக்கொண்டு காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து தனது தாயின் கையை உதறிவிட்டு முணுமுணுத்துக் கொண்டே திட்டியவாறு காரில் ஏறிச் சென்றார்.

இதற்கிடையே காதலித்து ஏமாற்றியதாக பெண்ணை தாக்க காத்திருந்த உறவினர்களை காவல்துறையினர் விரட்டினர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments