வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

0 1397

காதலியின் தோழியை கொலை செய்ய ஹேர்டிரையரில் வெடிகுண்டு பொருத்தி கொரியர் மூலம் அனுப்பிய வில்லங்க காதலனை போலீசார் கைது செய்தனர். வீட்டில் ஹேர் டிரையர் வெடித்து பெண்ணின் கைகள் சிதறிய சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டம் இலகல் நகரில் வசித்து வருபவர் மறைந்த ராணுவ வீரரின் மனைவி பசவ ராஜேஸ்வரி . சம்பவத்தன்று பக்கத்து வீட்டில் வசித்து வரும் அவரது தோழி சசிகலாவின் பெயரில் DTDC கூரியரில் பார்சல் ஒன்று வந்துள்ளது. சசிகலா ஊரில் இல்லாததால், அந்த பார்சலை வாங்கி வைக்குமாறு பசவ ராஜேஸ்வரியிடம் , சசிகலா கூறியிருக்கிறார்.

பார்சல் கைக்கு வந்ததும் அதில் என்ன உள்ளது என்று திறந்து பார்க்குமாறு சசிகலா கூறியுள்ளார். பார்சலை திறந்தபோது அதில் புதிய ஹேர் ட்ரையர் ஒன்று இருந்துள்ளது. பசவராஜேஸ்வரி அதனை இயக்கி பார்க்கும் ஆர்வத்தில், மின் இணைப்பு கொடுத்து ஸ்விட்சை ஆன் செய்த அடுத்த நொடியே அதிக சத்தத்துடன் அந்த ஹேர் ட்ரையர் வெடித்து சிதறியுள்ளது. இதில் அவரது கைகள் இரண்டும் மணிக்கட்டுக்கு கீழ் துண்டுகளாக சிதறியதால் அலறித்துடித்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்து பார்த்தபோது பசவ ராஜேஸ்வரியின் கை விரல்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு அறை முழுவதும் ரத்தம் தெறித்திருந்தது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரரின் மனைவியான பசவ ராஜேஸ்வரி, கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்த பின்னர் சரணப்பா ஷீளவந்த் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகின்றது. இதனை அறிந்த தோழி சசிகலா, இந்த தவறான பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளார்.

இதனால் பசவ ராஜேஸ்வரி , சரணப்பாவை சந்திப்பதை குறைத்துக் கொண்டார். தனது தகாத உறவுக்கு சசிகலா முட்டுக்கட்டையாக இருப்பதால் அவரை தீர்த்து கட்ட சரணப்பா முடிவு செய்துள்ளார். இதற்காக தான் வேலை பார்க்கும் கிராணைட் குவாரியில் இருந்து டெட்டனேட்டர் மற்றும் வெடி பொருட்களை திருடி ஹேர் ட்ரையரில் மின் இணைப்பு கொடுத்தால் வெடிக்கும் வகையில் தயார் செய்துள்ளார். இந்த ஹேர் டிரையர் வெடிகுண்டை சசிகலாவின் வீட்டு முகவரிக்கு பார்சலில் அனுப்பி வைத்துள்ளார்.

சசிகலா வெளியூருக்கு சென்றதால் அந்த பார்சல் எதிர்பாராத விதமாக சரணப்பாவின் காதலி பசவ ராஜேஸ்வரியின் கைகளுக்கு கிடைத்து குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். சரணப்பாவை கைது செய்த போலீசார் அவர் வெடிகுண்டு தயாரிப்பது குறித்து தெரிந்து கொண்டது எப்படி ? என்றும் இதனை தயாரிக்க அவருக்கு உதவிய நபர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments