பைக்கில் ட்ரிபிள்ஸ் போவோம்.. போர்ஸ் போவோம்.. பைவ்ஸ் போவோம்.. விபத்தில் சிக்கினா ஓடிப் போவோம்..! மாஸ்டர் பட தயாரிப்பாளரின் லாரி மோதியது

0 1261

மீஞ்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில், அதிவேகத்தில் பைக்கில் டிரிபிள்ஸ் சென்ற சிறுவர்கள்,  மாஸ்டர் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கண்டெய்னர் லாரியில் மோதி விபத்தில் சிக்கினர். பைக் ஓட்டியவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் 2 நண்பர்களும் அவரை தவிக்க விட்டு சென்று விட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஜங்ஷன் அருகே மூன்று பேர் ஹெல்மெட் அணியாமல் ஒரே பைக்கில் ஜிக்சாக் முறையில் சாகசம் செய்தவாறு மீஞ்சூர் நோக்கி சென்றனர். அப்போது முன்பக்கம் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று வெளிவட்ட சாலையை நோக்கி இடப்பக்கமாக திரும்பியுள்ளது. லாரி திரும்புவதற்கு முன்பாக உள்ளே புகுந்து அதனை முந்தி போய்விடலாம் என்று பல்சர் பைக்கை வேகமாக முறுக்கிய நிலையில் பைக்குடன் லாரியின் முன் சக்கரத்தில் எலுமிச்சம் பழம் போல சிக்கிக் கொண்டனர் பைக் சாகச பாய்ஸ்.!

அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ராமச்சந்திரன் பைக் சிக்கியதை பார்த்த்து சத்தமிட்டு லாரியை நிறுத்தினார். இருந்தாலும் பைக் சாகசம் செய்த அப்பு என்ற 21 வயது இளைஞரின் கால் லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. பின்னால் அமர்ந்திருந்த இரு இளைஞர்களோ விழுந்த வேகத்தில், காயம்பட்டுக்கிடந்த நண்பனை அம்போவென விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.

போக்குவரத்து போலீஸ்காரர் மட்டும் தக்க சமயத்தில் லாரி ஓட்டுனரை எச்சரித்து நிறுத்தவில்லை யென்றால் லாரியின் அடியில் மாட்டிக் கொண்டிருந்த பல்சர் அப்பு உடல் சிதைந்து பலியாகி இருப்பார் என்கின்றனர் விபத்தை நேரில் பார்த்தவர்கள்

கால் முறிந்ததால் எழுந்திருக்க இயலாமல் சாலையோரம் அமர்ந்திருந்த அப்புவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி , நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் கெரி இண்டெவ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments