ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

0 1102

சென்னையில் வீடுபுகுந்து மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம்  நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஜாலி கொள்ளையனையும், பெண் கூட்டாளிகளையும் 150 சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து போலீசார் கைது செய்தனர்

கையில் கத்தியுடன் தாத்தா வர்ராரு.. என்று ரீல்ஸில் நவரசங்களையும் கொட்டும் இவர் தான், மூதாட்டி வீட்டில் கைவரிசை காண்பித்து சிக்கிய ஜாலி கொள்ளையன் மனோகர்..!

சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வரும் 88 வயது மூதாட்டி சரோஜா. கணவர் இறந்து விட்ட நிலையில் தனது வீட்டில் பெரிய அளவிலான சாய்பாபா சிலையை வைத்து சரோஜா வழிபட்டு வந்தார். அக்கம் பக்கத்து வீட்டாரும் சாய்பாபை கும்பிட இவரது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் மூதாட்டியிடம் சாமி கும்பிட வந்ததாக கூறி வீட்டுக்குள் நுழைந்த இரு பெண்கள் சரோஜாவின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் நகைகளை பறித்து சென்றனர்.

சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். வீட்டுக்குள் நுழைந்த இரு பெண்களில் ஒருவர் மூதாட்டியின் வீட்டில் முன்பு வேலைபார்த்த ராஜாமணி என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் திருவான்மியூரில் காத்திருந்த ஆண்களுடன் இரு பைக்குகளில் ஏறி சென்றதை வைத்து, ஒவ்வொரு சிசிடிவி காமிராவாக ஆய்வு செய்தனர்.

சுமார் 150க்கும் மேற்பட்ட சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்த போலீசார், திருவான்மியூரில் இருந்து போலியான நம்பர் பிளேட்டை வைத்து பைக்கில் பயணித்த கொள்ளையர்கள், விக்கிரவாண்டி சென்றவுடன் போலி நம்பர் பிளேட்டை தூக்கி எறிந்ததை கண்டறிந்தனர். அதன் பின்னர் வண்டியின் உண்மையான நம்பர் பிளேட்டுடன் தங்கள் சொந்த ஊரான சேத்தியாத்தோப்பு பகுதிக்கு சென்றது தெரியவந்தது. அங்குள்ள வீட்டில் பதுங்கி இருந்த ராஜேஸ்குமார், அவரது மனைவி புவனேஸ்வரி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

புவனேஸ்வரியின் தோழியான ராஜாமணி, சம்பந்தப்பட்ட மூதாட்டி வீட்டில் வேலை பார்த்து வந்தவர் என்பதால், மூதாட்டி எப்போதும் கழுத்தில் தங்க நகைகள் அணிந்திருப்பது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஜாலி கொள்ளையன் ரீல்ஸ் மனோகரை அனுகி கொள்ளைக்கு திட்டமிட்டுள்ளனர்.

மனோகரின் யோசனைப்படி சாய்பாபாவை கும்பிட செல்வது போல நடித்து மயக்க ஸ்பிரே அடித்து கொள்ளைசம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து தேவக்கோட்டையில் வைத்து ராஜாமணியை சுற்றி வளைத்த போலீசார், குரோம் பேட்டையில் வைத்து ரீல்ஸ் மனோகரை கைது செய்ததாக தெரிவித்தனர்.

பார்ப்பதற்கு யோகி பாபு போல இருப்பதாக நண்பர்கள் கூறியதை நம்பி, சினிமா வாய்ப்புக்காக ஜாலியாக காமெடி ரீல்ஸ் செய்து யூடியூப்பில் பதிவிட்டு வந்த மனோகர், நகைக்கு ஆசைப்பட்டு கொள்ளை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments