பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

0 1481

சென்னை துரைப்பாக்கத்தில், பெண் ஒருவரை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து சாலையில் வீசிய வழக்கில் கார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் புதியதாக கட்டுமான பணி நடைப்பெறும் இடத்திற்கு தேவையான பொருட்களை ஏற்றி வந்த லாரி உள்ளே சென்ற போது VIP டிராலி சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனை தள்ளி வைத்த போது சூட்கேசில் இருந்து ரத்தம் மற்றும் பெண்ணின் தலைமுடி வெளியே தெரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் ரோந்து சென்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

துரைப்பாக்கம் ரோந்து காவலர் பொன்னுசாமி ரத்தம் வழியும் சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தபோது, பெண் ஒருவரின் சடலம் இருப்பதை கண்டு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் சோதனை செய்ததில் அழுகிய நிலையில் பெண் தலையில் கொடூரமாக தாக்கப்பட்டு சூட்கேசில் வைத்து வீசி சென்றது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் பெண் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெண்ணின் அடையாளங்களை வைத்து யார் என போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் மாதவரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய தீபா என்பவரை காணவில்லை என அவரது சகோதரர் வீரமணி என்பவர் துரைப்பாக்கம் பகுதியில் கடந்த 2 நாட்களாக தேடி வந்தார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் துரைப்பாக்கம் போலீசாரிடமும் அது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

Find my Device app மூலமாக தனது அக்காவின் செல்போன் சிக்னலை வைத்து தேடியதாகவும், கடைசியாக துரைபாக்கம் பகுதியில் சிக்னல் காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது சகோதரி இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும், தெரிவித்துள்ளார். இரவு நேரம் என்பதால் தொடர்பு எண்ணை வாங்கி வைத்து அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் சூட்கேஸில் பெண் உடல் கிடைக்கப்பெற்றதால் தீபாவின் சகோதரர் வீரமணியை துரைப்பாக்கம் போலீசார் நேரில் வரவழைத்தனர்.

சூட்கேஸில் இருந்த பெண்ணை போலீசார் அவரிடம் காண்பித்த போது காணாமல் போன தனது சகோதரி தீபா என்பது தான் என அடையாளம் காட்டி உள்ளார்.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சூட்கேஸூடன் ஒருவர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகர் 4 வது தெருவில் வசித்து வரும் மணிகண்டன் என்பது தெரிந்நது. மணிகண்டனை பிடித்து விசாரித்ததில், அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. மணிகண்டன் கடந்த 3 மாதங்களாக துரைப்பாக்கத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி உள்ளார். பெருங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் கார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று உறவினர்கள் ஊருக்கு சென்றிருந்ததால் வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன், தீபாவை தொடர்பு கொண்டு தனிமையில் இருக்க அழைத்ததாகவும், அதற்காக பேசப்பட்ட தொகையை விட அதிகளவு தீபா கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தீபாவுக்கும் மணிகண்டனிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் "நீ என்னை அழைத்ததை எல்லோருக்கும் தெரிவித்து அசிங்கப்படுத்தி விடுவேன்" என்று மிரட்டியதால் மணிகண்டன் வீட்டில் இருந்த சுத்தியலால் அடித்ததில் தீபா அங்கேயே ரத்த காயத்துடன் மயங்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த நிலையில் ஊருக்கு சென்ற உறவினர்கள் மீண்டும் சென்னை திரும்புவதாக கூறியதால் பயந்து போன மணிகண்டன் அதே பகுதியில் உள்ள சூட்கேஸ் கடையில் புதிதாக டிராலி சூட்கேசை வாங்கியுள்ளார். பிறகு தீபாவின் சடலத்தை சூட்கேசில் துணி வைப்பது போல மடித்து வைத்தார். இதையடுத்து மணிகண்டன் துரைப்பாக்கம் குமரன் குடில் மெயின்ரோட்டில் அருகில் புதியதாக கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தின் அருகில் சூட்கேஸை யாருக்கும் தெரியாமல் மணிகண்டன் வீசி விட்டு சென்றதும், வீட்டில் ஒன்றும் தெரியாதது போல வழக்கமான பணிகளை செய்து வந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2 நாட்கள் கொலை செய்யப்பட்ட தீபாவின் உடலை வீட்டிலேயே மணிகண்டன் மறைத்து வைத்து இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீபா உடல் கிடைக்கப்பெற்ற சில மணி நேரங்களிலேயே கொலை செய்தவரை துரைப்பாக்கம் போலீசார் திறமையாக விசாரித்து கைது செய்ததற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments