மதுரை பெண்கள் விடுதியில் தீ விபத்து சம்பவம்.. அலட்சியமாக செயல்பட்டதாக விடுதியின் உரிமையாளர் கைது..!
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் குளிர்சாதனப்பெட்டி வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், விடுதியின் உரிமையாளர் இன்பா கைது செய்யப்பட்டார்.
அதிகாலையில் அறையில் இருந்த குளிர்சாதனபெட்டி வெடித்து அதில் இருந்த சிலிண்டர் மூலம் வெளியேறிய நச்சுப்புகையால் 5 பேர் மயங்கிய நிலையில், பரிமளா, சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர். விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விடுதியில் போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் அவசரகாலத்தில் பயன்படுத்தும் உபகரணங்கள் இல்லாமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் அதில் 45க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்துள்ளனர். இந்த கட்டடம் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டு, 7 நாட்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதியே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உபயோகத்தில் இல்லாத குளிர்சாதனப் பெட்டி ப்ளக் பாயின்டில் பொருத்தப்பட்டு சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு இருந்ததாகவும், ஒயர் எரியத் தொடங்கியவுடன் பெரும்பாலானோர் வெளியே வந்ததாகவும் விடுதியில் இருந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.
Comments