45 வயதுக்கு மேல் போராடி பெற்ற குழந்தை கார் விபத்தில் தாயுடன் பலியான சோகம்!

0 1182

சென்னையை அடுத்த செங்குன்றம் அலமாதி அருகே சாலை நடுவே உள்ள டிவைடரில் கார் மோதி, தாயும் 4 வயது பெண் குழந்தையும் உயிரிழந்தனர். ஏற்கனவே சாலை விபத்தில் தங்களது 23 வயது மகனை பலி கொடுத்து, 45 வயதுக்கு மேல் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தம்பதியின் வாழ்வில் ஐந்தே ஆண்டுகளில் மற்றொரு சோகம் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஜெயவேல் - உஷாராணி தம்பதி. இவர்களது ஒரே மகன் ஹரிகிருஷ்ணன் மருத்துவம் படித்து வந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன் தனது 23வது வயதில் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஒரே மகனைப் பறிகொடுத்து தவித்த தம்பதி, பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கி, பல லட்சம் ரூபாய் செலவழித்து சிகிச்சை பெற்றதில் அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. 4 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகள் பிறந்தபோது, ஜெயவேலுவுக்கு வயது 48. உஷாராணிக்கு வயது 44.

சாய் மோனிஷா, சாய் மோகித் எனப் பெயரிட்டு குழந்தைகள் இருவரையும் வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள உஷாராணியின் தாய் வீட்டுக்கு 4 பேரும் வாடகைக் கார் ஒன்றில் சென்றுள்ளனர். அதிவேகமாகச் சென்ற கார் அலமாதி அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள டிவைடரில் மோதியது. காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கிய நிலையில், உஷாராணி, சாய் மோனிஷா மற்றும் ஓட்டுநர் என 3 பேரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஜெயவேலுவும் சாய் மோகித்தும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் காரை ஓட்டிச் சென்றதால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments